20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் -ராஜித

 

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை ஜனாதிபதியே எடுப்பாரெனவும் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன, 20 ஆவது திருத்த யோசனைகள் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை பெற்றுக் கொள்வதற்காக அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார். 
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; 
தேர்தல் மறு சீரமைப்பு குறித்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு 225 உறுப்பினர்கள் என்ற நிலைப்பாட்டை  ஐக்கிய தேசிய கட்சி கொண்டிருந்தாலும் அமைச்சரவையின் தீர்மானப்படி 237 க்கு அக்கட்சி இணங்கியுள்ளது. சிறிய, சிறுபான்மைக் கட்சிகள் 255 என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திவருகின்றன. இது குறித்து கலந்துரையாட முடியும். 
சிறுபான்மைக் கட்சிகள் வேறு யோசனைகளை வைத்திருக்கின்றன. எவ்வாறாக இருந்தபோதிலும் 20 ஆவது திருத்தம் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியிலும் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்டம் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைப் பெற்றுக் கொள்வதாகும். அதற்கு இரண்டுவார கால அவகாசம் தேவைப்படும். உயர்நீதிமன்ற வியாக்கியானம் வந்ததன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அது முடியும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.