சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணத்தின் பிரதி சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களிடம் இந்த ஆவணத்தை இன்று வியாழக்கிழமை கையளித்தார்.
இது தொடர்பான நிகழ்வு இன்று பள்ளிவாசல் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அப்துல் மஜீத் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், மாகாண சபையின் கடந்த மாத சபை அமர்வில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சமர்ப்பித்த தனி நபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதன் பிரகாரமே இப்பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு முகவரியிடப்பட்டுள்ள இப்பரிந்துரை ஆவணத்தில் கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர் ஆரியபதி கலப்பதி கையொப்பமிட்டுள்ளார். இந்த ஆவணம் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பிரதியிடப்பட்டிருக்கிறது.
இதனையே சபாநாயகர் சார்பில் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.