உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்-முதலமைச்சர் நஸீர் அஹமட்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள்/ஆணையாளர்களுக்கான கூட்டம் ஒன்று முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் தலைமையில் நேற்று மாலை திருகோணமலை பிரதம செயலாளர் காரியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
DSC_3915_Fotor
இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்படும் பிரச்சனைகள், எதிர் நோக்கும் சிக்கல்கள், அங்கு இடம்பெறும் வேலைப்பாடுகள், அங்குள்ள தேவைகள் போன்றவற்றை சகலரிடமும் கேட்டறிந்த முதலமைச்சர்
சபை நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்று விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்திய முதலமைச்சர்:

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தங்களின் பணிகளைச் சரிவரச் செய்ய வேண்டும், சபைகளில் சரியான வேலைப்பாடுகள் நடந்தால் மாகாணசபைக்கு எந்த முறைப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்காது.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சபைகளின் மூலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தவிர ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு தெரியப்படுத்துவதுடன், அதற்காக பதிலளித்தல் என்பவற்றை உள்ளூராட்சி மன்றங்களில் சரிவர செய்கின்றபோது எந்தவிதமான குறைகளும் மக்களிடம் ஏற்படாமல் மக்கள் மனங்களில் சபை பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.

எனவே இன்று ஒவ்வொரு ஊர்களிலும் பல குழப்பங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பொது மகனும் சபைகளைப் பற்றி பெரும் குறைகளை எடுத்துக்கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இன்றைய உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் தொடர்பாடலில் மிகவும் பின்தங்கிய நிலை காணப்படுவதேயாகும். மக்களுடனான நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்த வேண்டியவர்கள் உள்ளூராட்சி மன்றங்களே, ஏன் என்றால் அவர்களிடம் வரிகளை அறவிடும் நாம் ஏன் அவர்களை அனுசரித்துப்போவதில்லை. ஆகவே பொது மக்கள் விடையத்தில் என்றுமே விளிப்பாகவும், சிறப்பாகவும் இருந்து நமது பணிகளைச் செய்கின்றபோது நாம் மக்களிடம் நண்பர்களாகி விடுகிறோம் எனவே மக்கள் குறைகளைக் கேட்டறிந்து அதன் படி செயற்பட எங்களை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே ஒரு நிருவாகத்தின் அதிகாரி என்று மட்டும் இருந்து விடாது பரந்த சிந்தனையோடு நம் செயல்கள், வேலைப்பாடுகள், கோரிக்கைகள் அமைகின்றபோது பெரும் வெற்றிகளை ஒவ்வொரு சபைகளும் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கிறது.
கடந்த காலங்கள் எவ்வாறு சென்றன என்பது பற்றிய சிந்தனைகளை மறந்து இனிவரும் காலங்களில் மக்களுக்கான சபைகள், மக்களின் வேலைகளை முடித்துக்கொடுக்கும் சபைகள், ஊரை சுத்தமாக்கி, வெளிச்சமாக்கி, நவீன மயப்படுத்தும் சகல வேலைகளையும் இனிமேல் ஒவ்வொரு சபைகளும் முன்னெடுக்க வேண்டும்.
அது போன்று ஒவ்வொரு மாத இறுதியிலும் சபை நடவடிக்கைகள், சபையில் ஏற்படும் தேவைப்பாடுகள், போன்றன தெரிவிக்கப்படவேண்டும். இவ்வாறு இருக்கும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அதுபோன்று ஆளணிப்பற்றாக்குறை இருக்கும் சபைகள் உடனடியாக அதற்குரிய தகவல்களை மாகாணசபையில் சமர்ப்பித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் அடுத்த மாவட்டத்தின் தேவையையும் அறிந்து அவர்களுக்கும் உதவிகள் செய்து தங்கள் வேலைகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜனாப்.சலீம், மாநகர சபைகளின் ஆணையாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 
DSC_3925_Fotor DSC_3921_Fotor