யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத் தளபதியுமான கருணா என்ற வி.முரளிதரனிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
600 பொலிஸார் கொலை சம்பவ விசாரணையை துரிதப்படுத்துமாறு ஓய்வுபெற்ற பொலிஸார் சங்கம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இது தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.