அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பிரதேசத்தில் திண்மக் கழிவுகள் கொட்டப்படுகின்ற பொது இடங்களை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று புதன்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
தனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன், எம்.எஸ்.உமர் அலி மற்றும் அதிகாரிகள் சகிதம் முதல்வர் அப்பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
குறிப்பாக சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மீனவர் நூலகம், லீடர் அஷ்ரப் வித்தியாலயம் மற்றும் சில வாடிகளுக்கு அருகாமையிலும் வைத்தியசாலை வீதி, சாஹிராக் கல்லூரி வீதி, நூலக வீதி போன்ற இடங்களிலும் மக்கள் அன்றாடம் குப்பை, கூளங்களை கொட்டுவதால் அப்பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு மக்களின் இச்செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.