அஸ்லம் எஸ்.மௌலானா
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவதற்கு முற்பட்ட நாசகார சக்திகளே இப்போது வில்பத்து விடயத்தை பூதாகரமாக்கி, முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தி, இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் சபையில் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வில்பத்து விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை அவைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரேரணையை சமறப்பித்து உரையாற்றிய ஏ.எம்.ஜெமீல் மேலும் கூறியதாவது;
“1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு மாகாண முஸ்லிம்கள் புத்தளம், குருநாகல், கொழும்பு மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்ததை சர்வதேசம் அறியும்.
இவ்வாறு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமது சொந்த நிலத்திலேயே மீள்குடியேறுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இந்த நிலையில் வில்பத்து காட்டை அழித்து அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று சில நாசகார சக்திகள் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி, இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எத்தனிக்கின்றனர்.
அமைச்சர் றிஸாத் பதியுதீன் தமது சொந்த மண்ணில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிமகளின் மீள்குடியேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிகளை முன்னெடுக்கின்றபோது சில இனவாத சக்திகள் அவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோஷங்களை எழுப்புகின்றன.
இதனால் அந்த மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகையினால் இனவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவதற்கு இந்த நாசகார சக்திகள் மேற்கொண்ட இன ஒடுக்கல் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதே மஹிந்த ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு மூல காரணியாக அமைந்தது என்பதை எல்லோரும் அறிவோம்.
அத்தகைய ஒரு தவறு மைத்திரி- ரணில் நல்லாட்ட்சியிலும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதை நான் இந்த உயர் சபையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது பேரினவாதிகள் மேற்கொண்ட வெறியாட்டம் தொடர்பில் நான் இந்த சபையில் பிரேரணை சமர்ப்பித்தது மட்டுமல்லாமல் எமது கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து அரபு நாடுகளுக்கு சென்று அப்பிரச்சினை பற்றி முறையிட்டிருந்தோம்.
அப்போது மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களின் இரத்தத்தை குடிக்கிறார் என்று அரபு நாடுகளில் நான் கூறியதாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நான் அஞ்சவுமில்லை அடிபணியவுமில்லை.
இப்போதும் சொல்கின்றேன் யார் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சமூகத்திற்காக குரல் கொடுப்பதில்; இருந்து நான் ஒதுங்கிக் கொள்ள மாட்டேன். என்னை மக்கள் இந்த சபைக்கு அனுப்பியதன் நோக்கம் சமூகத்திற்காக பேச வேண்டும் என்பதற்காகவே. எனது அரசியலுக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் உண்மைகளை உரைப்பதற்கும் அநீதிகளை தட்டிக் கேட்பதற்கும் ஒருபோதும் தயங்க மாட்டேன்” என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.
பிரேரணையை ஆதரித்து மற்றும் பல உறுப்பினர்களும் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அகதிகளாக்கப்பட்ட அனைத்து மக்களினதும் மீள்குடியேற்றத்திற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.