இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவரது சொந்த இடமான கண்டியில் இனிமேல் விளையாடமாட்டார். ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் காலி மற்றும் கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதலாவது போட்டி காலியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இவர் காலியிலேயே தனது இறுதிப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இவர் காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலேயே அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்கக்கார 12,203 ஓட்டங்களை 58.66 எனும் சராசரியில் பெற்றுள்ளார். இதில் 38 சதங்களும் உள்ளடங்கும்.
மேலும் இவர் 11 இரட்டைச்சதங்களை குவித்துள்ளதுடன் அதிகூடிய இரட்டைச்சதங்களை விளாசியவர் எனும் பிரட்மனின் சாதனைனை முறியடிக்க இன்னும் 1 இரட்டைச்சதமே தேவையாகவுள்ளது.
அத்துடன் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இவர் முச்சதம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
வேகமாக 8000,9000,10000,11000 மற்றும் 12000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்தவர் எனும் சாதனையும் சங்காவின் வசமே உள்ளது.
அதுமட்டுமல்லாது சங்கா மற்றும் மஹேல இணைந்து, டெஸ்ட் போட்டியில் அதிகூடிய இணைப்பாட்டத்திற்கான சாதனையைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை தென்னாபிரிக்க அணிக்கெதிராகவே படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் பலவகையான சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள சங்காவின் ஓய்வு தொடர்பான அறிவிப்பானது இலங்கை கிரிக்கெட்டிற்கு பாரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.
தொடர்ந்து விளையாடுவாராக இருந்தால் மேலும் பல சாதனைகளை முறியடிப்பார் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
https://www.youtube.com/watch?t=282&v=26F3HnOqA8s