பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் மற்றும் கிறிநொச்சி பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்வதில் சில பகுதியினர் மறைமுகமான எதிர்பினை காட்டிவருவதாக தகவல் வழிகாட்டல் மத்திய நிலைய உப தலைவர் எம். நிபாஹீர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்களின் மீள்குடியமர்வு தொடர்பான மீளாய்வு கூட்டம் யாழ் பொது நூலகத்தின் பேரவை செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இக் கருத்தினை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்இ 2011ஆம் ஆண்டில் இருந்து மீளக்குடியேற்றங்களுக்கு நாம் எவ்வளவோ முயற்சிக்கின்ற போதிலும் அது மிகவும் வலுவிழந்த நிலையிலேயே முன்னெடுக்கப்படுகிறது.
இந் நிலையில் மீளக்குடியமர்வில் சில தரப்பினர் மறைமுகமான எதிர்பை காட்டிவருகின்றனர். நாங்கள் யாருக்கும் எந்தவித தீங்கையும் செய்யாத போதும் எங்கள் சமுகத்தின் மீது சில பகுதியினர் வெறுப்பினை காட்டுவது மனவேதனைக்குரியது.
எங்களது சமுகம் ஏனைய எல்லா சமுகங்களையும் உள்வாங்கி அரவனைத்து செல்லக்கூடியதான ஒற்றுமைமிக்க சமுகமாகவே உள்ளது. அத்துடன் மீளக்குடியமர்வு மற்றும் அது தொடர்பான சகல விடயங்களையும் நாங்கள் நல்ல முறையில் நடைமுறைப்படுத்தவே விரும்புகின்றோம். என அவர் தெரிவித்தார்