பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, புதிய தேர்தல் திருத்தம் அடங்கிய 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென கூட்டணியின் மற்றுமொரு சாரார் வலியுறுத்தியுள்ளதாலேயே இவ்வாறான கருத்து முரண்பாடுகள் வலுவடைந்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை இல்லாதொழித்து புதிய தேர்தல் திருத்தம் அடங்கிய
20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுவே தற்போதுள்ள மிக முக்கிய விடயமாகுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பார்க்கின்ற பொழுது நம்பிக்கையில்லா பிரேரணை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பதாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் பிரிவினர், நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் பிரதமரை பதவி நீக்கம் செய்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமொன்றை அமைத்து அதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றனர்.