புலம்பெயர் தமிழர்கள் என்றதும் அவர்கள் புலிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் கொம்பு முளைத்த பிசாசுகளுமல்லர். அதேபோன்று சிவப்புக்குள்ளர்களும் இல்லை. இந்நாட்டின் நற்பெயருக்கு இலக்கணமாய் திகழும் அவர்களை புறந்தள்ளி புறக்கணித்து எம்மால் செயற்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர நேற்று சபையில் தெரிவித்தார்.
டயஸ் போரா என்ற சொற்பதத்துக்குள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற மூன்று சமூகத்தினரும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் விஞ்ஞானிகளும் வைத்திய நிபுணர்களும் பிரபல வர்த்தகர்களும் இன்னும் சிறந்த கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் வர வேண்டியவர்கள் என்பதால் புலம்பெயர் சமூகத்தினரை எமது அரசாங்கம் அன்புடன் வரவேற்கிறது என்றும் கூறினார்.
புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையானது அன்றைய காலத்து தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து செயற்படுத்தப்பட்ட விடயம் என்பதால் அவர்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சரின் லண்டன் விஜயத்தின் போது அங்கு உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதன்போது மேற்படி கேள்விக்கு வெள்ளிக்கிழமை பதிலளிக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.இதன் பிரகாரமே நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்திருந்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டதான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளின் பிரகாரம் புலம் பெயர் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களுடன் நல்லுறவைப் பேணுமாறு கூறப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு இருந்து வருகின்ற பிரச்சினைகளை அறிந்து அவர்களை உள்நாட்டு பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேற்படி விதப்புரைகளின் பிரகாரமும் வெளிவிவகார அமைச்சர் என்ற பொறுப்பினை ஏற்றிருந்ததன் அடிப்படையிலுமே நான் மேற்படி புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தேன்.
லண்டனில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி சுரேன் சுரேந்திரன் தேசிய நல்லிணக்கக் குழுவின் பிரதி நிதி ஜயசிங்க தென்னாபிரிக்கா பிரதி நிதி சுவிஸின் பிரதிநிதியான டோனி ஹசன் நோர்வோ பிரதிநிதியான எரிக்சொல் ஹெய்ம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது புலம்பெயர் சமூகத்துடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எரிக் சொல்ஹெய்ம் வெறும் இரண்டு மணித்தியாலங்களே பங்கேற்றிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பிலான போர்க்குற்றங்கள் உள்ளக விசாரணைகள் தொடர்பிலோ எதுவும் பேசப்படவில்லை.
அதே போன்று அரசியல் தீர்வு விவகாரம் குறித்தோ பேசப்படவில்லை என்பதுடன் பிளவுபடாத இலங்கை ஐக்கியத்துடனான செயற்பாடு குறித்தே பேசப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை என்பவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய நிலையில் டயஸ் போரா என்றழைக்கப்படுகின்ற புலம்பெயர் சமூகத்தினர் தமிழ் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என மூன்று இனத்தவர்களையும் சேர்ந்த 15இலட்சம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
டயஸ் போரா எனும் போது அவர்கள் இலங்கையில் இருந்து மட்டுமல்லாது உலகின் வேறு பல நாடுகளிலும் இவ்வாறு புலம்பெயர் சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இங்கு டயஸ் போரா என்றதும் புலம்பெயர் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை புலிகளாவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ சித்தரிக்கப்படுகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் புலிகளும் அல்ல தீவிரவாதிகளும் அல்ல அத்துடன் அவர்கள் கொம்பு முளைத்த பிசாசுகளும் அல்ல சிவப்புக்குள்ளர்களும் அல்ல.
எனவே டயஸ் போரா என்று விளிக்கப்படுகின்றவர்களான புலம்பெயர் தமிழர்களை புதைத்தள்ளி புறங்கணித்து செயற்படுவதற்கு நாம் தயாரில்லை.புலம்பெயர்ந்து வாழும் மூன்று சமூகத்தவர்கள் வைத்தியர்கள் விஞ்ஞானிகள் வர்த்தர்கள் கல்விமான்கள் இருக்கின்றனர். மேலும் புலம்பெயர் தமிழர்கள் என்றவுடன் அவர்களில் சிலர் அடிப்படைவாதிகளாக இருக்கின்ற போதிலும் அங்கு வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழர்களையும் அவ்வாறு கணக்கிட்டு விட முடியாது. பெரும்பாலானோர் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுடன் இணைந்து ஐக்கியமாக செயற்படும் நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். உலக நாடுகளுக்கே சவால் விடுக்கும் அளவிலான திறமைசாலிகள் இருக்கின்றனர். எனவே அவர்களை புறந்தள்ளி விட நாம் தயாரில்லை. இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் மூன்று முதல் நான்கு தடவைகளில் சந்தித்து பேசியிருக்கிறேன். அந்த வகையில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். அப்படியான பின்தங்கிய சிந்தனையை கைவிட்டு விட வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயற்படுகிறோம். இவ்வாறு புதிதாக சிந்திப்பதில் என்ன தவறு இருந்து விடப்போகிறது.
பழிக்குப்பழி என்ற சிந்தனையை கைவிட்டு ஐக்கியத்தைப்பற்றி சிந்திப்பதும் புத்தர் காட்டிய வழியில் பயணிப்பதும் தவறாக இருக்க முடியாது. முன்னைய அரசாங்கம் இழைத்த தவறுகளை நாமும் செய்வதற்கு தயாரில்லை. புலம்பெயர் தமிழர்களை விரோதிகளாகவே பார்த்தனர். இதனாலேயே பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நட்பு நாடுகளின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் சர்வதேசத்தின் ஆதரவை இழக்க நேரிட்டதுடன் இலங்கையானது சர்வதேசத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் காணப்பட்டது.
இருந்த போதிலும் புலம்பெயர் சமூகம் இலங்கையுடன் இணைந்து செயற்படும் அளவில் நாம் நிலைமைகளை மாற்றியமைத்திருக்கின்றோம். அத்துடன் சர்வதேசத்தின் மத்தியிலும் நன்மதிப்பு கிடைத்திருக்கின்றது.
புலம்பெயர் தமிழர்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண பிதா இம்மானுவேல் சமர்ப்பித்திருந்த அறிக்கை மிகத் ் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளது.
வண பிதா தனது அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிலர் தகாத கூற்றுக்களை முன்வைத்து வந்ததாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மக்களுக்குமான பிரச்சினைகளின் காரணிகளைக் கண்டறிந்து சமாதானத்திற்கானதும் ஐக்கியத்துக்கானதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஐக்கியத்துக்கான நாடாகவே தமிழர்கள் பார்க்கின்றனரே தவிர பிளவுபட்ட இலங்கையை விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அந்த வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் லண்டனில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.