நாட்டில் என்னென்ன இருக்கவேண்டும் என்பதைக் காட்டிய வள்ளுவர், ஒரு நாட்டில் என்னென்ன இருக்கக் கூடாது என்பதையும் சுட்டி நிற்கின்றார்.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
ஒரு நாட்டில் மிகுந்த பசியும்; தீராத நோயும்; எந்நேரமும் பகைவர் தாக்குவர் என்ற அச்ச நிலையும் இல்லாதிருப்பதே நாடு என்பது வள்ளுவர் கண்ட நாடு. இந்த அடிப்படையில் குறைவில்லா விளைச்சல், தக்க சான்றோர்கள், செல்வம் படைத்த பரோபகாரிகள் நாட்டில் இருக்கும்போதுதான் பசியும் பிணியும் பகையும் இல்லாமல் போகும்.
எங்கள் நாடென்று இலங்கையை-அதற்குள் அடங்கக்கூடிய தமிழர் தாயகத்தை எடுத்துக் கொண்டால், யுத்த சூழலால் ஏற்பட்ட புலம்பெயர்வு காரணமாக எங்கள் மண்தக்கசான்றோர்களையும் செல்வந்தர்களையும் இழந்து போயிற்று.
கூடவே உணவுக்குரிய விளைச்சலைப் பெருக்கக் கூடியவர்களும் குறைந்து போயினர்.
எனவே இத்தகைய நிலைமைகளால் தமிழர் தாயகம் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருகிறது. இத்துன்பங்களை நீக்குவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கலாம்.
அதாவது சந்ததி இடைவெளி கொண்ட காலம் இதற்குத் தேவைப்படலாம். சிலவேளை இந்தக் குறையை எங்கள் காலத்தில் நிவர்த்திக்க முடியாது என்றொரு நிலைமையும் உருவாகலாம்.
இவை வாழ்கின்ற மக்களை வேதனைப்படுத்தும். இதனால் நாட்டில் எதெது இருக்கக்கூடாது என்று வள்ளுவர் கூறினாரோ; அதெல்லாம் தானாக வந்து சூழும். இந்நிலைமையைத் தவிர்த்து, வள்ளுவன் கண்ட நாட்டை விரைவாக கட்டியமைக்க வேண்டுமாயின் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் பிரஜைகளாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். தங்கள் நாட்டுக்கு தாமும் தங்கள் பிள்ளைகளும் வந்து போகின்ற ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்
இது எனது தாய் மண் என்ற உணர்வோடு புலம் பெயர் தமிழர் நாட்டுக்கு வந்து போகும் போது, தமிழர் தாயகத்தில் நிறைந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும்.
ஆகவே இரட்டைக்குடியுரிமை என்ற சந்தர்ப்பத்தை புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் தமிழர் தாயகத்திற்கு அடிக்கடி வந்து போகின்றவர்கள் என்ற நிலைமையை உருவாக்குவது அவசியம்.
இதன்மூலம் எங்கள் தமிழ் மண் அபிவிருத்தி அடைவதுடன் புலம்பெயர் தமிழர்களும் எங்கள் சனத்தொகை எண்ணிக்கைக்கு முண்டு கொடுக்க முடியும் என்பதுடன் தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை புலம்பெயர் தமிழர்களின் பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளைகளும் கற்றறியவும் வாய்ப்பு உருவாகும்.
இல்லையேல் என்னோடு என் தமிழ்வாழ்வு முடியும் என்ற தீராக்கவலை புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுவது திண்ணம் என்பதால், அனைத்துப் புலம் பெயர் தமிழர்களும் இரட்டைக் குடியுரிமையில் இணைவது கட்டாயமானதாகும்.