அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கையை வெள்ளிக்கிழமை(12) வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கவும் அதில் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்குப் பெறும் முன்னணி முறையிலும் 55 பேரை விகிதாசார முறையிலும் 37 பேரை தேசிய பட்டியலூடாகவும் தெரிவு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதை கபே வரவேற்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறிய கட்சிகள் நாடாளுமன்றில் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 225 ஆகவே வைத்துக்கொண்டு தேர்தல் தொகுதிகளை 35ஆல் குறைப்பதற்கு திங்கட்கிழமை, அமைச்சரவை தீர்மானித்தபோது தேர்தல் மறு சீரமைப்பை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் ஏறப்படுத்தியது.
இது சிறு கட்சிகளை மோசமாக பாதிப்பதாக இருந்ததுடன் அர்த்தமுள்ள மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த குறைந்தபட்சம் 234 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென நாம் கருதுகின்றோம். இப்பொது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை 237ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
மறுசீரமைப்பு திருத்தங்கள், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகளுக்கு வழிசமைக்குமென நாம் நம்புகின்றோம். மேலும் வெறுக்கப்பட்ட விருப்புவாக்கு முறைமையும் புதிய திருத்தங்கள் இல்லாமல் செய்வதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என கபே அமைப்பு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.