போதைப்பொருள், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை இனங்காண்பதற்கு ஒரு முறைமையில்லை. இவ்வாறானவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அவ்வாறானவர்களுக்கு சு.க.வின் சார்பில் இம்முறை வேட்பு மனுக்கள் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை(11) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அளித்த பதில்களும்
கேள்வி: பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையா?, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையா? முதலில் வரும்.?
பதில்: 20ஆவது திருத்தம் தான் முதலில் வரும்.
கேள்வி: 20ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி முதலில் எதிர்த்ததே?
பதில்: ஆம், எதிர்த்தது. பின்னர் தொகுதிவாரி மற்றும் விருப்பு வாக்கு முறைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஒரு இணக்கத்துக்கு வந்துள்ளது.
கேள்வி: 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும்?
பதில்: ஏன்? 19ஆம் திருத்தம் நிறைவேற்றப்படவில்லையா?
கேள்வி: நாடாளுமன்றம் இன்று அல்லது நாளை கலைக்கப்படுமா? அல்லது ஏப்ரல் வரைக்கும் செல்லுமா?
பதில்: ஜனாதிபதி கூறினாரா?
கேள்வி: அமைச்சரவை குட்டிபோடுமா?
பதில்: கொள்கை அடிப்படையில் 45 அமைச்சர்களும் 35 பிரதியமைச்சர்களும் இருக்கவேண்டும்.
கேள்வி: பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஆகிய இரண்டும் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படுமா?
பதில்: ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படாது.
கேள்வி: நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களிடம், கையெழுத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியுள்ளாராமே.
பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்படி கூறவில்லை. அவர், அப்படிபட்ட ஜனாதிபதி அல்ல.
கேள்வி: அமைச்சர், பிரதியமைச்சர்களிடையே கூட்டுப்பொறுப்பு இல்லை என்றுதான் விளங்குகின்றது. விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒன்றை கூறினால், அதன் பிரதியமைச்சர் ஒன்றை கூறுகின்றார். இது மக்களிடத்தில் பெரும் குழப்பமாக இருக்கின்றது.
பதில்: மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் ஒன்று கூறுவேன், வாசுதேவ நாணயக்கார ஒன்றை கூறுவார். நான் கூறுவது ஊடகங்களுக்களில் வெளிவராது. வாசுதேவவின் கருத்து ஊடகங்களில் வெளிவரும். அப்படிதான்.
கேள்வி: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணி ஸ்தம்பிதமடைந்துவிட்டதே?
பதில்: அந்த ஆணைக்குழுவின் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசியலமைப்பு பேரவை நடவடிக்கைகளை எடுக்கும்.
கேள்வி: சு.க.வில் வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளாரா?
பதில்: அவர், மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு வலுபெற்றுள்ளது. அவரும் விண்ணப்பித்துள்ளார். அவருடைய மகனான நாமல் ராஜபக்ஷவும் விண்ணப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டிடுவதற்கு வேட்பு மனு கிடைக்கும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை இனத்தோர், இளைஞர்கள் மற்றும் படித்தறிந்தவர்களின் வாக்குகள் கிடைக்காது. இந்த வாக்குகள் இன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினால் வெற்றியீட்ட முடியாது.
கேள்வி: ஐ.நா. கூட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் யார் பங்கேற்பார்?
பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பார். புது நாடாளுமன்றம் தெரிவானதன் பின்னரா? இல்லை, அதற்கு முன்னரா என்று கூறமுடியாது.
கேள்வி: அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லையே அப்படியானால் அரசியலமைப்பு பேரவை இயங்காதா?
பதில்: ஏழு பேர் கொண்ட அரசியல் பேரவை இருக்கிறது. அப்பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படாவிட்டாலும் அப்பேரவை இங்கும். அதனை இயங்கச்செய்வதற்கு அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.
கேள்வி: 20ஆவது திருத்தத்துக்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே
பதில்: இந்த திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக நாளை (இன்று) வெள்ளிக்கிழமை விசேட அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை முன்வைக்கலாம்.
கேள்வி: 20ஆவது திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி எப்பொழுது வெளிவரும்?
பதில்: அநேகமாக நாளை(இன்று) வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
கேள்வி: சில விடயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சற்று சிந்திப்பதாக பரவலாக கூறப்படுகின்றதே?
பதில்: சிலர் கால்களை ஒட்டிவைத்துகொண்டு இருக்கின்றனர். பலர் கால்களை இரண்டு இடங்களில் வைத்துகொண்டிருகின்றனர். ஓடுபவர் விழுவர், ஒரே இடத்தில் நிற்பவர் நின்றுகொண்டே இருப்பார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கத்தான் வேண்டும். கடந்த காலங்களிலும் இவை இடம்பெற்றுள்ளன.
கேள்வி: உள்ளுக்குள்ளேயே அரசாங்கம், அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றதா?
பதில்: எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்கவை படுகொலை செய்தது ஐக்கிய தேசியக் கட்சியினர் அல்ல. உள்ளுக்குள் இருந்தவர்களே படுகொலை செய்தனர். சமூக புரட்சியை ஏற்படுத்தும் போது இவ்வாறான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.
கேள்வி: உள்ளுக்குள் இருப்பவர்கள் தான் எதிர்க்கின்றனர் அப்படியா?
பதில்: அழுத்தம் இல்லாட்டி இலங்கை இல்லை. அவை தொடர்பில் தீர்மானத்தை எடுத்துள்ளோம். எந்த பணிஸ்க்கு எந்த வாழைப்பழத்தை கொடுக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு தெரியும். சிலவற்றுக்கு கொடுத்துள்ளார்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதே?
பதில்: ஓய்வு எடுக்கவேண்டி காலத்தில் சந்திக்கு சந்தி நின்று கூட்டம் நடத்தினால், இந்த காலத்தில் விகாரைகளுக்கு சென்று வழிபட்டுவிட்டு, உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவரவேண்டும். அப்படியிருந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது.
கேள்வி: உலக தமிழர் பேரவையுடன் என்ன பேசப்பட்டது?
பதில்: சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு எல்லோருடனும் இணைந்துபோவதற்கு முயற்சிக்கின்றோம். அதன் ஒரு கட்டமாகவே இது இடம்பெற்றுள்ளது. அதனைதான் அரசாங்கம் செய்வதற்கு முயற்சிக்கின்றது.
கேள்வி: மாத்தறை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளனவே!
பதில்: விளம்பரம் தொடர்பில் தேடி பார்ப்போம். அந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்யவில்லை. கூட்டத்துக்கு செல்போரின் எண்ணிக்கை குறைய, குறைய இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படலாம்.
கேள்வி: அக்கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போவதற்கு தடையேதும் விதிக்கப்பட்டுள்ளதா?
பதில்: ஆம். தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: அப்படியிருந்தும் போகின்றார்களே!
பதில்: நிறுத்தவேண்டிய இடத்தில் நாம் போகவிடாமல் நிறுத்துவோம்.
கேள்வி: அவன்காட், தேர்தல் சூழ்ச்சி தொடர்பில் விசாரணை செய்யப்படுமா?
பதில்: இவை தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்.
இதேவேளை, கொக்காவிலில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் வெளியான செய்தி குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, அந்த ஆயுதங்கள் புதிய ஆயுதங்கள் அல்ல பழைய ஆயுதங்கள். தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்று பதிலளித்ததன் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன, ஊடகவியலாளர்களின் பெயர்களை கண்டாலே அவர், எவ்வாறான செய்தியை எழுதியிருப்பார் என்று யூகித்துகொள்ள முடியும். இரவில் தூக்கத்தில் இருக்கும் போது புலிகளை கனவில் கண்டு, விடியற்காலை வந்து அப்படியே எழுதிவிடுவார். அவ்வாறானவர்களுக்கு நாடு முழுவதிலும் ஏன்? உலகம் முழுவதிலும் புலிகள்தான் இருக்கின்றனர் என்றார்.