‘அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது சட்ட மூலத்தை ஏற்க முடியாது ‘-த.தே.கூ.தீர்மானம்

 


அர­சி­ய­ல­மைப்பில் தேர்­தல்­கள்­ மு­றைமை மாற்றம் தொடர்­பாக அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்ள 20ஆவது திருத்தச்சட்­ட மூலத்தை ஏற்­றுக் ­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அது தொடர்­பான யதார்த்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் எடுத்­து­ரைப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

தமது கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றில், விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் அதனை எதிர்ப்­பதை தவிர வேறு­வ­ழி­யேதும் இல்­லை­யெ­னவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்டம் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் நேற்றை தினம் கொழும்பில் நடை­பெற்­றது.

இவ்­வொ­ருங்­கி­ணைப்பு குழு கூட்டம் குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்­கையில்,

கடந்த திங்­கட்­கி­ழமை இரவு நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது பல்­வேறு சர்ச்­சை­க­ளுடன் காணப்­பட்ட தேர்­தல்கள் முறைமை மாற்றம் தொடர்­பான 20ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இறு­தி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் 225என்ற மொத்த எண்­ணிக்­கையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தாது தொகு­திகள் 125 ஆக குறைக்­கப்­ப­டு­வ­துடன் மாவட்ட விகி­தா­சாரம் 75 ஆகவும் தேசிய விகி­தா­சாரம் 25 ஆகவும் மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட யோச­னையை பிர­தமர் முன்­மொ­ழிந்­தி­ருந்தார். இதற்கு சிறு­பான்மை கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே அவ்­வி­டயம் தொடர்­பான இன்­றைய (நேற்று) எமது சந்­திப்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. அதன் இறு­தியில் யாழ் மாவட்­டத்தில் காணப்­பட்ட அசா­தா­ரண நிலை­மை­களால் உயி­ரி­ழப்­புக்­க­ளையும் சந்­தித்­துள்­ள­துடன் மக்கள் இடம்­பெ­யர்ந்­து­முள்­ளனர். அவ்­வா­றான நிலையில் அவர்­க­ளுக்­கான எந்­த­வி­த­மான நியா­யங்­களும் தீர்­வு­களும் வழங்­காத நிலையில் வெறு­மனே யாழி­லி­லுள்ள 11தொகு­தி­களை 6ஆக குறைப்­பதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

மேலும் இதனால் வடக்கு மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டையும் அபா­யமும் ஏற்­ப­டு­கின்­றது. அவ்­வாறு பிர­தி­நி­திகள் குறை­வ­தா­னது மக்­களின் அபி­லா­ஷை­களை உரி­மை­களை வென்­றெ­டுப்­பதை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கும் மறை­மு­க­மாக கார­ண­மா­கின்­றது. ஆகவே 125தொகு­திகள் என்ற புதிய முறையில் பிர­த­மரால் முன்­மொ­ழி­யப்­பட்டு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ள 20ஆவது திருத்தச் சட்ட மூலத்­தினை எம்மால் ஏற்­க­மு­டி­யாது.

இவ்­வி­டயம் தொடர்­பாக முன்­ன­தா­கவும் நாம் ஜனா­தி­பதிஇ பிர­தமர் ஆகி­யோ­ரிடம் நேர­டி­யாக எமது நியா­யங்­க­ளையும் யார்த்­தங்­க­ளையும் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தோம். அவ்­வா­றான நிலையில் மீண்டும் அவ்­வி­ட­யங்­களை நாம் எடுத்­து­ரைக்­க­வுள்ளோம். எமது கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு குறித்த சட்ட மூலம் பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­மானால் அதனை எதிர்த்தே கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்க வேண்­டிய தவிர்க்­க­மு­டி­யாத சூழ­லுக்குள் தள்­ளப்­படும். அவ்­வா­றான நிலை ஏற்­படும் பட்­சத்தில் அர­சாங்­கத்­துடன் எமக்கு காணப்­படும் தற்­போ­தைய உற­விலும் மாற்­றங்கள் ஏற்­படும் அபா­ய­முள்­ளது என்றார்.

அத்­துடன் சந்­திப்பில் பொதுத்­தேர்­த­லொன்று வர­வி­ருப்­ப­தாக கூறப்­படும் நிலையில் தேர்தல் விஞ்­ஞா­னபம், அத்­தேர்­தலை எவ்­வாறு கையாள்­வது, தொடர்­பாக ஒரு ஆரம்ப கட்­டப்­பேச்­சு­வார்த்­தையை மேற்­கொண்­ட­துடன் ஆசன ஒதுக்­கீடு ஏனைய விட­யங்கள் தொடர்­பாக மீண்டும் கூடி பேசவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமையன்று ஒவ்வொரு கட்சிகளும் 20ஆவது திருத்தம் குறித்து தமது நிலைப்பாட்டை நாளை வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரியதுடன் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தேர்தல்கள் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திருத்தத்தை அரசியலமைப்பில் மேற்கொள்வதற்கு தக்க தருணம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.