துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
அண்மையில் “வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஸாத் மீதான சந்தேகப் பார்வை” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தேன்.இக் கட்டுரைக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் துல்சான் தனது விமர்சனத்தினை முன் வைத்திருந்தார்.இவரது விமர்சனத்தில் நான் ஏதோ வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தினை தடுக்க முனையும் ஒருவர் போல வர்ணித்து இருந்தார்.எனது அவ் ஆக்கத்தில் இக் குடியேற்றம் பிழையானது என எங்கும் குறிப்பிடவில்லை.அவ் ஆக்கம் அமைச்சர் றிஸாத் தனது சுய நலத்திற்காக இவ் விடயத்தினை கிளறியுள்ளாரா என்பனையே மையமாக கொண்டிருந்தது.இவ்வாறு இருக்க என்னை இக் குடியேற்றத்தின் எதிரியாக வர்ணித்திருப்பது அவர் இக் கட்டுரையினை தெளிவாக விளங்கவில்லை என்பதனை முதலில் எடுத்துக் காட்டுகிறது.
இனி அவர் முன் வைத்த எனது கட்டுரைக்கான விமர்சனத்திற்கு வருவோம்
- ஹிரு தொலைக் காட்சியின் உரிமையாளரின் உறவினர் ஒருவர் சு.க சார்பாக போட்டி இட உள்ளார் என கதை கிசு கிசுக்கிறது என எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.இத் தொலைக் காட்சியின் உரிமையாளர் ஐ.தே.க சார்பாகவே போட்டி இட உள்ளார் எனக் கூறி ஏதோ மலை பிளந்து பிழை பிடித்து விட்டாப் போல் எழுதியுள்ளார்.இத் தொலைக் காட்சியின் உரிமையாளர் சு.க சார்பாக தேர்தல் கேட்பார் என நான் கூறியதன் நோக்கம் இத் தொலைக் காட்சியின் உரிமையாளர் குறித்த ஒரு கட்சியில் தேர்தல் கேட்க உள்ள தால் இப் பிரச்சினை அரசியல் இலாபங்களுக்கானது என்பதனை இன்னும் இன்னும் வலுவாக நிறுவதற்காகவே.எனவே,இவர் கூற்றுப் படி ஐ.தே.க இல் போட்டி இடுவார் என நோக்கினாலும் இத் தொலைக் காட்சிக்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்புடையதை அவரே ஒப்புக் கொள்கிறார்.இவ் தொலைக்காட்சியின் நோக்கம் அமைச்சர் றிஸாத்திற்கு சார்பானதா? எதிரானதா? என்பதனை அறிய ஹிரு தொலைக் காட்சி அமைச்சர் ரிஸாதுடன் நடாத்திய நேர் காணலில் தான் முன் வைத்த குற்றச் சாட்டுகளில் பகிரங்கமாக தோல்வியுற்றும் ஏன் மீள் ஒளி பரப்புச் செய்தது? தான் தோல்வியுற்றதனை தான் தோற்றுவிட்டேன் என எத் தொலைக் காட்சியாவது கூவித் திரியுமா? என்ற வினாவினை முன் வைத்திருந்தேன்.இதனைப் பற்றி இவர் தனது விமர்சனத்தில் கிஞ்சித்தேனும் கதைக்காதது ஏன்? எனது குற்றச் சாட்டினை ஒப்புக் கொள்கிறாரா?
- நான் இக் கட்டுரையில் அமைச்சர் றிஸாத் சு.க சார்பாக தேர்தல் கேட்பார் எனக் குறிப்பிட்டிருந்தேன்.தற்போது உண்மை கள நிலவரங்களினை நன்கு ஆராய்கின்ற போது அமைச்சர் றிஸாத் சு.க சார்பாகவே கேட்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன.இது பற்றி தனது விமர்சனத்தில் அவர் கூறும் போது “எதிர் வரும் தேர்தலில் எந்தக் காரணத்தினைக் கொண்டும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அல்லது அந்தக் கட்சி சார்பாக போட்டி இடுகின்ற எந்த எண்ணமும் அதன் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ இல்லை.இது தொடர்பாக எந்தப் பேச்சு வார்த்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடை பெற இல்லை எனக் கூறியுள்ளார்”.இவ்வாரம் செய்வாய்க் கிழமை 09-06-2015 நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அமைச்சர் றிஸாத்தினது நேர்காணலில் நீங்கள் எக் கட்சியில் தேர்தல் கேட்க உத்தேசித்துள்ளீர்கள் என்ற வினாவிற்கு.”அது அந்த நேரத்திலே எங்கள் கட்சி முடிவெடுக்கும்” எனக் கூறியுள்ளார்.தலைவர் அறியாததை சிசியன் அறிந்து விட்டாரா? அல்லது கட்சியின் எதிர் கால வியூகங்களினை போட்டு உடைக்கின்றாரா? ஏனெனில்,இவரது அம் மறுப்பில் “மு.கா ஆனது ஐ.தே.க உடன் பாராளுமன்றத் தேர்தல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே அ.இ.ம.கா செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.இது இரகசிய ஒப்பந்தங்களினை போட்டு உடைக்கின்றார் என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்ற அதே வேளை இவரது அரசியல் முதிர்ச்சி இன்மையினையும் தெளிவாகக் காட்டுகிறது.கட்சித் தாவி அ.இ.ம.கா இடம் இறுதியாக தஞ்சம் அடைந்துள்ள இவரிடம் ரகசிய ஒப்பந்தங்களினைக் கூறும் அளவு அமைச்சர் ஹக்கீம் அரசியல் சாணக்கியமும் அற்றவர் அல்ல.
- இன்னுமொரு சந்தேகமா நான் குறிப்பிட்ட விடயம் “தற்போது தொகுதி வாரித் தேர்தல் முறைமை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.வன்னியில் தமிழ் மக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் வன்னியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரினைப் பெறுவது இயலாத காரியம்.குறுகிய காலத்தினுள் முஸ்லிம் பிரதிநித்தித்துவத்தினை பெறச் சாத்தியமான மாவட்டத்தில் போட்டி இட்டு வெற்றி பெற குறுகிய காலத்தினுள் அமைச்சர் றிஸாத்திற்கு அதிகம் பிரபலமும் தேவைப்படுகிறது.இதற்கு இது சிறந்த வழிகளினை ஏற்படுத்தும் என்பதால் இது திட்டமிடப்பட்ட ஒன்றா?” எனக் கேட்டிருந்தேன்.இதற்கு பதில் அளித்த இவர் இம்முறை பழைய தேர்தல் முறைப்படியே தேர்தல் நடக்கும் என உறுதிபடக் கூறுகிறார்.இம்முறை பழைய தேர்தல் முறைப்படி நடந்தாலும் இருபது நிறைவேற்றப்படும் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தல் தொகுதி வாரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல் நடைபெறும் என்பதை அவர் ஏற்பார் என நம்புகிறேன்.எனவே,நேரடியாக தொகுதி வாரியில் கால் பதிப்பதை விட ஏற்கனவே அதீத செல்வாக்கு உடையவரினை உருவாக்கி தொகுதி வாரியில் கேட்பது இலகுவானது எனவும் இன்னுமொரு கோணத்தில் எனது கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் நிறுவலினை அமைக்கலாம்.அண்மையில் நவமணிக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் றிஸாத் “தேர்தல் மாற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் அதனையும் வைத்தே எமது தேர்தல் வியூகங்கள் அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.என்ன..?? இவர் கூற்றுப் படி எனக்கு தெரியாதது போல் அமைச்சர் றிஸாதும் இது பற்றி அறியாமல் உள்ளாரோ..??
- அடுத்து எனது கட்டுரையில் வில்பத்து விவாகாரத்தில் அமைச்சர் றிஸாத் ஊழல் புரிந்துள்ளாரா? என்பதனை நிரூபிக்க வில்பத்துவினை அடிப்படையாக கொண்டு மு.கா இனைச் சேர்ந்த ஒருவரால் தொடுக்கப்பட்ட வழக்கு அவ் வழக்குத் தொடுத்த நபரின் உறவினருக்கு அமைச்சரின் அலுவலகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டதா? என கேட்டிருந்தேன்.இதற்கு பதில் எழுதியுள்ள இவர் குறித்த நபரின் உறவினருக்கு அமைச்சர் அலுவலகத்தில் பதவி வழங்கப்பட்டமையினை சிறிதும் குறிப்பிடாமை இதன் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்துகிறது. இது பற்றி எழுதியுள்ள இவர் “இக் குற்றத்திற்கான அடிப்படை ஆதாரம் இல்லாததனால் மேற்கொண்டு வழக்குத் தொடர்வதில் தாமதம் ஆகிறது” என ஒரு வழக்கரிஞ்ஞராக இருந்து கொண்டு குறிப்பிடுவது நகைப்பிற்குரியது.இக் குற்றத்திற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றால் இவ் வழக்கினை நிராகரிக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்களே அவர்களுக்கு எதிராக அவர்களே ஆதாரம் தேடுவது போன்று குறிப்பிட்டுள்ளமையினை என்ன என்று சொல்ல? எங்கே போய் சொல்ல?
- அடுத்து வில்பத்து விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கும் என்பதனை நிரூபிக்க “அங்கு வெட்டப்பட்டுள்ள மரங்கள் எங்கே?” எனக் கேட்டிருந்தேன்.இதற்கு பதில் அளித்த அவர் “அங்கு அப்படி இருக்கவில்லை.பற்றைக் காடுகள் மாத்திரமே படந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.” வில்பத்துவில் குடியேறிய மக்கள் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் “நாங்கள் இருந்த இடத்திலா? இவ்வளவு பெரிய மரங்கள்” என ஆச்சரியப்படும் அளவு அங்கு மரங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.இது ஊடகங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயமாகும்.இவ்வாறு இருக்க இவர் இவ்வாறு கூறுவதனை எவ்வாறு ஏற்க இயலும்..?? அடுத்து இவர் குறிப்பிட்ட ஒரு விடயம் “அவ்வாறு ஓரிரு மரங்கள் வெட்டப்பட்டிருந்தாலும் அவை உரிய அரசாங்கம் நடவடிக்கையின் பிரகாரம் பிரதேச செயலகத்தினூடாக சட்டப்படி மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன” எனக் கூறி இருந்தார்.இதில் இவர் மரங்கள் வெட்டப்பட்டிருந்தாலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.வெட்டப்பட்டாலும் எனும் வார்த்தை சந்தேகத்திற்குரியது.ஆனால், பிரதேச செயலகத்தினூடாக சட்டப்படி மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என உறுதியாக பதில் கொடுத்துள்ளார்.மரம் வெட்டப்பட்டுள்ளதா? எனத் தெரியாமல் எப்படி இவர் உறுதியாக பிரதேச செயலகத்தினூடாக சட்டப்படி மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன எனக் கூற முடியும்?
இவரின் கட்டுரை மிக நீளமாக இருப்பினும் அதில் அமைச்சர் றிஸாத்தினை புகழ்ந்தும்,அமைச்சர் ஹக்கீமினை இகழ்ந்தும் தள்ளியுள்ளார்.இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.