கிழக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது அரசியல் விரக்தியின் வெளிப்பாடே..
சந்திரகாந்தனின் அறிக்கைக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலடி:
கிழக்கு மாகாண சபையில் நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்-
சந்திரகாந்தனின் இந்த அறிக்கை அவரின் அரசியல் வங்குறோத்து நிலையையும், நல்லாட்சி மீதான அவரின் அச்சத்தின் வெளிப்பாடுகளுமே தவிர வேறொன்றுமில்லை என முதலமைச்சர் மேலும்தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் அம்பாரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது என்ற கருத்துக்கள் சந்திரகாந்தனின் உண்மைகளை சரியாக தெரிந்து கொள்ள விரும்பாத வக்கிர உணர்வின் வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
மேலும் இவ்வாண்டில் தனது அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் 11 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு இதில் 5 -தமிழ் கிராமங்களும் , 4- முஸ்லிம் கிராமங்களும், 2 -சிங்களக் கிராமங்களும்
தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றமை நல்லாட்சிக்கு உதாரணமன்றி வேறென்ன என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 180நாட்கள் வேலை செய்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் அரச சுற்று நிருபத்துக்கேற்ப தகுதியானவர்களை தெரிவு செய்து நியமனம் வழங்கும் பொறுப்பு பிரதம செயலாளரினதும், நிருவாகத்துக்கு பொறுப்பாகவுள்ள பிரதி பிரதம செயலாளர்களது பொறுப்புமாகும்.
நான் முதலமைச்சராவதற்கு முன்பே இச்செயற்பாடு கிழக்கு மாகணத்தில் செயற்படுத்தப்பட்டு நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சில முறைப்படுகளும் தவறுகளும் சுட்டிக்காட்டப் பட்டமையினால் அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு தகமையுடைய அனைவருக்கும் நியமனம் வழங்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறு மாகாண பிரதம செயலாளருக்கும், எனது அமைச்சின் செயலாளருக்கும் நான் உத்தரவு வழங்கியுள்ளேன்.
நிலமை இவ்வாரு இருக்க கள்ளாட்சி என்றும், அரச அதிகாரிகளை செயற்திறன் அற்றவர்கள், என்று இவர் விமர்சிக்க முயல்வது
இவரின் சிறுபிள்ளைத்தனத்தின் மற்றுமொரு முகம் என்றே கூறவேண்டும்.
இன்று சமாதானம், சகவாழ்வும் மலர்ந்திருக்கும் இம்மாகாணத்தில் மீண்டும் இனங்களிடையே கசப்புணர்வுகளை ஏற்படுத்த முனைவதும் இனவாதக் கருத்துக்களை பரப்புவதும் பொலிசார் மீது மக்களுக்கு சந்தேகங்களை உண்டு பன்னும் வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் மீன்டுமொரு இரத்தக்களரி மீது இவர்கொண்டுள்ள எதிர்பார்ப்பே யன்றி வேறில்லை.
இவ்வாறான ஒரு நிலைமையினை இம்மாகாணத்தில் உருவாக்க இவர் போன்றவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இவர் (சந்திரகாந்தன்) முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டவரையறைகளையும், நிதி நடைமுறைகளையும் மீறி மாகாண நிதியைப் பாவித்தமை தொடர்பில் இன்னும் கணக்காய்வு விசாரணைகள் முடிவடையாமல் உள்ளமையை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது, நிலமை இவ்வாறு இருக்க நல்லாட்சியைக் கள்ளாட்சி என்று நாக்கூசாமல் கூறும் இப்படியானவர்களின் செயற்பாடானது தங்களது கடந்தகால மோசடிகளும், தகிடு தத்தங்களும் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே என்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.