அஸ்லம் எஸ்.மௌலானா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஆற்றலும் அனுபமும் கொண்டுள்ள ஒருவரே உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர் கல்வி அமைச்சர் சரத் அமுனுகம, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அவர் அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இக்கோரிக்கை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பது முஸ்லிம்களின் கல்வி, கலாசார, அரசியல், சமூக, பொருளாதார எழுச்சியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலாசாலையாகும். இதன் உருவாக்கத்திலும் அபிவிருத்தியிலும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு முழுப் பங்களிப்பு செய்தவன் என்ற ரீதியில் இப்பல்கலையின் நலன்களில் நான் எப்போதும் மிகவும் கரிசனையாக இருந்து வருகின்றேன்.
அந்த வகையிலேயே இப்பல்கலைக் கழகத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்காகவே இவ்விடயத்தை அரசாங்க உயர் மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தரை தெரிவு செய்வதற்காக கவுன்சில் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள மூவருள் கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி ஆகிய இருவரும் இப்பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக பாரிய பங்களிப்பை செய்துள்ளனர்.
இவர்கள் இப்பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல் இப்பல்கலைக் கழகத்தின் ஆரம்ப காலம் தொட்டு விரிவுரையாளர்களாகவும் , சிரேஷ்ட விரிவுரையாளர்களாகவும் திணைக்களத் தலைவர்களாகவும் (Head of the Department) பீடாதிபதிகளாகவும் (Dean) கடமையாற்றி கல்வி மற்றும் நிர்வாகத்துறையில் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர்.
மிகவும் திறமையும் ஆளுமையும் கொண்டுள்ள இவர்கள் இருவரும் இப்பல்கலைக் கழகத்தின் மாணவர்கள், விரிவுரையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பீடாதிபதிகள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என்று அனைத்து தரப்பினரினதும் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பவருக்கு இத்தகைய பண்புகளும் தகுதிகளும் இருப்பது அவசியமாகும். வெறுமனே கூடிய வாக்குகள் பெற்றவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இப்பல்கலைக் கழகத்துடன் எவ்வித சம்மந்தமும் இல்லாத, பதவிக்காக விண்ணப்பம் செய்து வருகின்ற ஒருவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவாராயின் அது இப்பல்கலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் நலன்களுக்கு குந்தகமாக அமையலாம் என்று கருதுகின்றேன்.
அதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த கவுன்சில் கலைக்கப்பட்டு, புதிய கவுன்சில் அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் அப்புதிய உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது பேராசிரியர் என்ற ஒரே காரணத்துக்காகவே இப்பல்கலைக்கு வெளியே உள்ள நபர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்திற்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஆகையினால்தான் இப்பல்கலைக் கழகத்துடன் பின்னிப் பிணைந்து நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற அனுபவ முதிர்ச்சியும் ஆற்றல் ஆளுமையும் கொண்டிருக்கின்ற கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி ஆகிய இருவருள் ஒருவரை புதிய உபவேந்தராக நியமனம் செய்யுமாறு அரசாங்க உயர்மட்டத்தினரை நான் வலியுறுத்திக் கேட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.