பீகார் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்: விட்டு கொடுத்தார் லாலு பிரசாத் யாதவ் !

gallerye_024757123_1270364

”பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு, நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக இருப்பார்,” என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்தார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒரே அணியாக சந்திக்க, முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் முடிவு செய்தன; அப்போது தான், பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்றும் திட்டமிட்டன. ஆனாலும், தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் உட்பட சில விஷயங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், காரசாரமான அறிக்கைகளையும் வெளியிட்டனர். இருப்பினும், ‘ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி நிச்சயம் அமையும்’ என, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறி வந்தார்.

இந்நிலையில், லாலுவும், நிதிஷ் குமாரும், டில்லியில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் வீட்டில், நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்துப் பேசினர். இந்த பேச்சில், தொகுதி பங்கீடு உட்பட, பல விஷயங்களில் சுமூகத் தீர்வு காணப்பட்டது.

பேச்சில் பங்கேற்ற பின், நேற்று நிருபர்களிடம் பேசிய, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் கூறியதாவது: பீகார் தேர்தலை சந்திப்பதில், லாலு – நிதிஷ் குமார் இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, நிதிஷ் குமார் இருப்பார்; முதல்வர் வேட்பாளராக நிதிஷை, லாலு தான் முன்மொழிந்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: பீகார் சட்டசபை தேர்தலின் போது, நான் பிரசாரம் செய்வேன்; எனக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே, எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை; வரும் நாட்களில், கருத்து வேறுபாடுகள் வளரவும் அனுமதிக்க மாட்டோம்; மதவாத சக்திகளை வீழ்த்த, நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். முதல்வர் பதவிக்கான போட்டியில், நானோ அல்லது என் கட்சியினரோ அல்லது என் குடும்பத்தினரோ இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.