எம். வை .அமீர்
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு என்னால் துணை போக முடியாது என்று கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக பதவிகளை உதறித் தள்ளி விட்டு மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து கேட்டபோதே அவர் மேற்படி கருத்துகளை தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று வேண்டும் என்பது அந்த சபை இல்லாதொழிக்கப்பட்டது முதல் எமது மக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நீண்ட காலக் கோரிக்கையாகும்.
இதற்காக கடந்த பல வருடங்களாக பொது அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து மைத்திரி- ரணில் நல்லாட்சியில் இதனை 100 நாள் வேலைத் திட்டத்தில் வெற்றி கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கையில் எமது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இக்கோரிக்கையை கையில் எடுத்து அதற்கான தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வந்தது.
எனினும் அவர்களும் தற்போது ஏமாற்றத்துடன் இக்கோரிக்கையை கைவிடும் நிலைக்கு வந்திருப்பதாக அறிகின்றோம்.
இந்நிலையில் எனது நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்புகின்றீர்கள். இது விடயமாக நான் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆரம்பத்தில் பள்ளிவாசல் என்னை அழைத்து இதற்காக ஒத்துழைப்பு கோரியபோது நான் இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்காக முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் பள்ளிவாசல் முன்னெடுக்கும் அனைத்து போராடங்களிலும் பங்கேற்பேன் எனவும் இதற்காக அரசியல் ரீதியாக எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்து எனது பதவிகளை இழப்பதற்கும் தயாராக உள்ளேன் என்றும் உறுதியளித்திருந்தேன்.
இதனைத் தொடர்ந்தே எமது கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் உள்ளூர் அரசியல் வாதிகளும் இக்கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து ஒத்துழைப்பதற்கு முன்வந்திருந்தனர். இதன் பின்னர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை பள்ளிவாசல் குழுவினர் சந்தித்து அவரது இணக்கத்துடன் அவரது ஏற்பாட்டில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவை சந்தித்து அவரது உத்தரவாதமும் பெறப்பட்டிருந்தது.
அந்த இடத்திலேயே சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வர்த்தமானிப் பிரகடனம் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பள்ளிவாசல் குழுவினர் முன்னிலையில் அமைச்சர் கரு ஜயசூரிய தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் பல மாதங்கள் கடந்தும் வர்த்தமானிப் பிரகடனம் வெளிவரவில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதிலுள்ள மர்மம் துலங்கப்பட வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் மக்களும் அங்கலாய்க்கின்றனர்.
சாய்ந்தமருதுக்கு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு எதிர்ப்புகள், சவால்கள் மத்தியில் கிழக்கு மாகாண சபையில் என்னால் தனி நபர் பிரேரணையை கொண்டு செல்லப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அது போன்று சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் முயற்சியினால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை வழங்க முடியும் என பரிந்துரை செய்து உள்ளூராட்சி அமைச்சுக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் எஞ்சியுள்ள கல்முனை மாநகர சபை ஆணையாளர் அல்லது மேயரின் கடிதமானது இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உண்மையில் இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட சபை என்பதால் ஏன் அது இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதற்கான முழுப்பொறுப்பையும் தலைமைத்துவமே ஏற்க வேண்டும்.
அமைச்சரின் உத்தரவாதத்தின் பின்னர் இது விடயமாக பள்ளிவாசல் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அதாவது எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்திப்பதற்கும் உள்ளூராட்சி அமைச்சு நிர்வாக மட்டத்தில் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு கூட ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர். எமது நீண்ட காலக் கனவு நிறைவேறப் போகிறது என்கின்ற பூரிப்புடன் நாளும் பொழுதும் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு நான் முழுமையாக கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று நான் மீண்டும் மிகவும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்று இறை இல்லமான பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்வது போல் நான் அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீற மாட்டேன்.
எமது மக்களின் நீண்ட கால தாகத்துடனும் உணர்வுகளுடனும் விளையாடுவதற்கு என்னால் ஒருபோதும் துணை போக முடியாது. இது விடயத்தில் அரசியல் பதவிகளை உதறித் தள்ளி விட்டு மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் நான் தயாராகவுள்ளேன். இதனால் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஓய்வெடுக்க நேரிட்டாலும் நான் அதையிட்டு கவலைப்படப் போவதில்லை என ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன்.
சாய்ந்தமருது நகர சபையை தடுப்பதற்காக சில அரசியல் தலைமைகள் சித்து விளையாட்டுகளை முடுக்கி விட்டுள்ளன. எமது மக்களின் உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த தான்தோன்றித்தனமான நயவஞ்சகத் தலைமைகள் யார் என்பதை விரைவில் தோலுரித்துக் காட்டுவேன்.
எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று அமைவதால் கல்முனைக்குடி, மருதமுனை போன்ற பிரதேசங்களுக்கோ கல்முனை மாநகர சபைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் இந்த பித்தலாட்ட அரசியல்வாதி மக்களை திட்டமிட்டு குழப்பி வருகின்றார். கல்முனை வாழ் தமிழ் மக்களைக் கூட குழப்பும் வகையில் அவர்களையும் ஒரு நகர சபையைக் கோருமாறு தனது தமிழ் அரசியல் முகவர்களைத் தூண்டி விட்டுள்ளார்.
ஆகையினால் பாராளுமன்றம் இன்றோ நாளையோ கலையவுள்ள சூழ்நிலை காணப்படுவதால் மேலும் இழுத்தடிப்புகளுக்கும் கழுத்தறுப்புகழுக்கும் இடமளிக்காமல் உடனடியாக சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு எமது கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை இப்பிரதேச மக்கள் சார்பாக மிகவும் மன்றாட்டமாக வேண்டிக் கொள்கின்றேன்.
என்னைப் பொருத்தவரை எனது சமூகத்திற்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் அனுசரணையுடன் அதனை வென்றெடுத்த ஆத்ம திருப்தியைக் கொண்டிருக்கின்ற நான் எனது சொந்த ஊருக்காக ஒரு உள்ளூராட்சி சபையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கின்ற பேரவாவுடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அதற்கான போராட்டத்தில் நான் எனது பதவிகளை மாத்திரமல்ல உயிரை இழக்க நேரிட்டாலும் அத்தகைய ஓர் ஆத்ம திருப்தியுடன் மரணிப்பேன் என்பதை சொல்லிக் கொள்கின்றேன்” என்று அவர் குறிப்பிட்டார்.