பனாமாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரிக்கும் கியூப வெளிவிவகார அமைச்சர் புருனோ ரொட்ரிகாசுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையில் 50ஆவது வருடங்களின் பின்னர் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பாக பதிவாகியுள்ளது.
கியூபாவை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. மேற்படி நடவடிக்கையானது இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை புதுப்பிப்பதுக்கு வழிசமைப்பதாக உள்ளது. இந்நேரம் பனாமாவில் இடம்பெறவுள்ள அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கியூப ஜனாதிபதி ராவூல் காஸ்ரோவும் வரும் நாட்களில் தமக்கிடையே முதலாவது சந்திப்பை நடத்தவுள்ளனர்.
கடந்த 1959ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்தமையே இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதி உயர்மட்ட சந்திப்பாகும்.