நூறு நாட்கள் கடந்தும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை -ஜே .வி.பி.

tilvin_silva_jvpமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசாங்கம் மழுப்பும் போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில்  வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கடந்து, 06 வாரங்கள் ஆகின்றன. 100 நாட்கள் ஆட்சியில் நடத்தி முடிப்போம் என்று கூறிய எந்தவொரு விடயங்களும் நடந்ததாகத் தெரியவில்லை. 100 நாட்களும் கடந்து விட்ட நிலையில் மக்களுக்கு புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்படவில்லை’ என அவர் தெரிவித்தார்.

அத்துடன், ‘நாட்டில் அராஜகம் பெருகிவிட்டது. நாடாளுமன்றத்தினால் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் ஒத்திவைக்கின்றது. இந்த சூழ்நிலை தற்செயலாக ஏற்பட்டதல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இந்தக் குழப்பங்களுக்கு காரணமானவர்கள். அவர்கள் நினைக்கின்றார்கள் நாட்டை அராஜகமான வழியில் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று. எனினும், ஐ.தே.க, ஐ.ம.சு.கூ இணைந்த அரசாங்கம், இந்த அராஜகத்தை இன்னும் உணரவில்லை’ என அவர் குற்றஞ்சாட்டினார். 

‘நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கின்றது. இதனால் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் என்பன அதிகரித்துள்ளன. கடந்த மாதம் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை, நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டுகின்றது. இது சமூக ரீதியிலும் தாக்கம் செலுத்துகின்றது. இவை அனைத்துக்கும் மஹிந்த ராஜபக்ஷவே காரணம். இவர் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை திரிவுபடுத்துவார். இதனை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பு’ என அவர் மேலும் தெரிவித்தார்