சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகபோவதில்லை என்று உத்தரவாதம் அளிக்கின்றேன் -ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நடைமுறைகள், நாட்டுக்கு பாதகமானவை அல்ல என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில்   நடைபெற்ற வர்த்தக சமூக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான  தற்போதைய ஒப்பந்தத்தை, தமது அரசாங்கம் ஆதரிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். 

இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“இப்போது இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் உட்பட நாட்டின் அனைத்து சர்வதேச உறவுகளும் சர்வதேச நாணய நிதிய கூடைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒட்டுமொத்த எதிர்கால வேலைத்திட்டமும் சர்வதேச நாணய நிதியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள். 

இந்த நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து எவரேனும் ஒருதலைப்பட்சமாக விலக நினைத்தால், அது நாட்டு குடிமக்களுக்கு நாட்டின் பொறுப்புக்கூறலை கைவிடும் செயலாகும். 

எனவே, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகபோவதில்லை என்று  உத்தரவாதம் அளிக்கின்றேன். 

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னோக்கி செல்லும் போது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.