‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கைப் பிரகடனத்தில் சமத்துவம், ஒப்புரவு, சட்டவாட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயக பண்புகள், பொருளாதார ஜனநாயகம், மக்கள் சார்ந்த ஆட்சி முறை, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சமூக நீதி, விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதற்கான கொள்கையொன்றை வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


நாட்டிற்கு தேவையான அனைத்து மக்களுக்கும் சமத்துவமான புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றையும் கொண்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 25 அமைச்சர்கள் மாத்திரமே பதவி வகிப்பார்கள் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வாகனங்களுக்கான உரிமம் இரத்து செய்யப்படும் என கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகளுக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

படிப்படியாக நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் தாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொள்கைப் பிரகடன வௌியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய அனுர குமார திசாநாயக்க, சுற்றுலாத்துறை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார கொள்கை மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினரே அதிகமாக பேசியதாகவும் அவ்வாறானவர்களின் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கு பதிலடியாக கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அனுர குமார திசாநாயக்க, மீண்டும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

சமத்துவத்தை ஏற்படுத்துவதில் அரசியலே முக்கிய பங்கு வகிப்பதாக அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு வௌிநாட்டு கொள்கை அவசியமாகும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.