ஜனாதிபதித் தேர்தல் , நாமல் ராஜபக்ஷவிற்கும் லொஹான் ரத்வத்தைக்கும் இடையில் மோதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்த லொஹான் ரத்வத்தவுடனான வாக்குவாதம், அடிதடி வரை சென்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்தவர்களின் தலையீட்டினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முறுகல் நிலை அடிதடி வரை சென்ற நிலையில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தலையிட்டு சண்டையை தடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு, ஒரு கட்சியாக ஆதரவளிக்க வேண்டும் என லொஹான் ரத்வத்த இதன்போது வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதன்போது  கட்சி என்ற ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டிய போதே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.