ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் உழைக்கவில்லை என்று யாரேனும் கூறினால் அது அபாண்டமானது; உண்மைக்குப் புறம்பானது.
2020 தேர்தலுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி கோத்தாபய
தலைமையிலான அமைச்சரவையில் அதாவுல்லாஹ் இடம்பெற்றுவிடக் கூடாது என்று சதி செய்தவர்களை இந்த நாடு அறியும்; நமது சமூகமும் நன்கறியும்.
இது கிழக்கு மாகாண அரசியலில் நிலவும் சாபக் கேடாகும்.ஆனால் சட்டம் இயற்றும்
பாராளுமன்றத்தின் சட்டவாக்க உரிமையைப் பயன்படுத்தி, இம்ரான் கானுடைய இலங்கை விஜயத்திற்கு முன்னராகவே, ஜனாஸா எரிப்பினை நிறுத்துவதற்கான சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக கொண்டு வருதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய காங்கிரஸ் ஏற்கனவே செய்து முடித்து இருந்தது.
அவர் நனிநபர் பிரரரேணையை தயார் செய்திருந்த போதிலும் தேசிய காங்கிரஸ் தலைவரின் அதீத ஈடுபாடும் போராட்டமும்தலையீடும் ஈற்றிலே அரசாங்கத்தை பணிய வைத்தது.
தேசியகாங்கிரஸ் தலைவரின் போராட்டத்திற்கு அன்றைய அரச தரப்பிலிருந்த
அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பினை மறக்கமுடியாது.
அன்றைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அவர்கள் கட்டாய ஜனாஸா எதிர்ப்பினை திணித்து வெளியிட்ட வர்த்தமானியானது, ஏற்கனவே பாராளுமன்றம் உருவாக்கியிருந்த நியதிச்சட்டத்திற்கு முரணானது என்பதை தேசிய காங்கிரஸ்
தலைவர் பாராளுமன்றத்தில் தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தார்.
அதனால் பவித்திராவும் அரசாங்கமும் குறித்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றி இருந்தது. அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் வருகைக்கு முன்னரே தேசிய காங்கிரஸ் தனது போராட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் அரசுக்குள் இருந்து போராடி வெற்றி பெற்றதற்கான நற்பெயரை அதற்கான கீர்த்தியை அதாவுல்லாஹ் எனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுவிடக்கூடாது
என்பதில் அவரது அரசியல் விரோதிகள் தெளிவாக இருந்தார்கள்.
கிழக்கில் இருந்து அரசியல் ஆளுமைகள் இத்தகைய புகழை அடைந்து விடக்கூடாது என்பதற்காக,
இம்ரான்கானின் வருகையுடன் தொடர்புபடுத்தி கபடமான ஊடக அபிப்பிராயத்தை சிலர் கவனமாக மக்கள் மயப்படுத்தினார்கள் ஜனாஸா எரிப்புக்குத் தீர்வு கிடைத்து
விடாமல் இருந்தால் “நாரே தக்பீர்’ வெற்றுக்கோஷ அரசியல் செய்யலாம் என்று பலர் கனவு கண்டு கொண்டு இருந்தார்கள்.
மு.கா. மற்றும் ம.கா போன்ற கட்சிகள் ஜனாஸா எதிர்ப்பு விவகாரத்தை வைத்து உணர்ச்சி அரசியல் செய்து கொண்டிருந்த போது,தேசிய காங்கிரஸ் மிகபக்குவமாகவும் நிதானமாகவும் தெளிவான குறி வைத்து தனது ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வைத்து சட்டபூர்வமாகப் போராடியது.
கட்டாய எரித்தல் என்று ஓர் ஒழுங்குவிதி உருவாக வேண்டும் என்றால் அதற்கான புறநடை பற்றி நியதிச் சட்டம் தெளிவாக அறிவுறுத்தல் வேண்டும்.
அதனால்தான்பாராளுமன்றத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் கௌரவ அதாவுல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையில், மரித்த மனித உடல்களின் எரிப்பை நிர்ப்பந்திக்கும் வர்த்தமானி அறிக்கையானது,
பாராளுமன்றத்தினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நியதிச்சட்டம் வழங்கிய ஒரு தெரிவான புதைக்கும் உரிமையினை மறுக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.
பொருள்கோடல் சட்டத்தின் பிரகாரம் குறித்த வர்த்தமானி பாராளுமன்றத்தினது நோக்கத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டி அந்த வர்த்தமானியினை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என்று போராடினார்.
எனவே நிபுணர் குழு அறிக்கை சாதகமாக வந்த பின்னரும் குறித்த வர்த்தமானி ரத்துச் செய்யப்படாவிட்டால் எரிப்பது தொடர்ந்தது என்றால்,
தனிநபர் பிரேரணை மூலம் நமது சட்டவாக்கத்திற்கான ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்துவது நமது கண் முன்னே தெரியும் தெளிவான
தெரிவாகும் என்பதனை தெளிவுபடுத்தி பாராளுமன்றத்தனூடாக தீர்வு காண முனைந்த தேசிய காங்கிரஸ் தலைவரின் முயற்சியை கொச்சைப்படுத்துவது அரசியல் தர்மம் ஆகாது.
கடமை உணர்வுடன் போராடும் ஆளுமைகளின் பணியை மலினப்படுத்தும் போது எதிர்காலத்தில் அர்ப்பணம் நிறைந்த இளைய தலைமுறை உருவாகாது என்பதை நாம் அனைவரும் மனதிற்கொள்ள வேண்டும்.
சட்டத்தரணி மர்சூம் மௌலானா.