நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் கையொப்பங்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன. விரைவில் அதனையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாங்கள் பின்கதவால் பிரதமரை நியமிக்க முயற்சிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவே பின்கதவினால் பிரதமராகியுள்ளார் என்பதனை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். சுசில் பிரேம்ஜயந்த அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால் பிரதமரின் சார்பில் அமைச்சர் ஒருவர் முன்மொழியப்பட்டுள்ளமை ஒரு சிக்கலை தோற்றுவித்துள்ளது. அதாவது சட்டத்தின் படி எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பண்பியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி சிவில் சமூக பிரதிநிதிகளின் நியமனம் தொடர்பில் ஏனைய கட்சிகளின் ஆலோசனை பெறப்படவில்லை. எனினும் அனைத்து விடயங்களும் சுமுகமாக இயக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் என்று நம்புகின்றோம். எனினும் இதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன.
இதேவேளை பின்கதவினால் எதிர்க்கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஆனால் நாங்கள் பின்கதவால் பிரதமரை நியமிக்க முயற்சிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவே பின்கதவினால் பிரதமராகியுள்ளார் என்பதனை மறந்துவிடக்கூடாது. எம்மிடமே பெரும்பான்மை பலம் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே பிரதமராக முடியும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லாதவரை பிரதமராக்க முடியாது.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உருவாக்கிவருகின்றோம். அதற்கு தற்போது கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டதும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.