கவிஞர் ஆசுகவி அன்புடீன் வபாத்தானார்

கவிஞர் ஆசுகவி அன்புடீன் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தனது கவித் திறமையினால் இலங்கைத் தீவு முழுவதும் பிரசித்தி பெற்ற கவிஞராக திகழ்ந்து வந்தார் . மரணித்தாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பர் இன்ஷா அல்லாஹ் .

எல்லாம் வல்ல இறைவன் அவரின் நற்கருமங்களை அங்கீகரித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தினுள் நுழைவிப்பானாக ! ஆமீன்

 

**முழுப்பெயர்: பக்கீர் முகையதீன் கலந்தர் லெவ்வை.

**பிறப்பு: 1951.08.25

**தந்தை: அகமது மீராசாகிப் பக்கீர் முகையதீன்.

**தாய்: மீராசாகிப் ஆசியா உம்மா

**முகவரி: தாஹா லேன், பாலமுனை- 04

**கல்வி:

ஆண்டு 01-09 வரை பாலமுனை அ.மு.க பாடசாலை (மின்ஹாஜ்) இலும், 09 தொடக்கம் சாதாரண தரம் வரை நிந்தவூர் அல் அஷ்ரக்கிலும் கற்றுத் தேர்ந்தார்.

**தொழில்:

1975-2011 வரை அஞ்சல் திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றார்.

**சிறப்பு:

“ஆசுகவி அன்புடீன்” என்று பெயர் தாங்கும் இக்கவிஞர் தனது பெயரால் கவிதை வாழும் தேசம் எங்கும் பாலமுனையின் மணம் பரப்பி மண்ணிற்கு என்றும் மகுடம் சூட்டுபவர்.

இதுவரை தனது கவிப் பயணத்தில் சாமரையில் மொழி கலந்து, ஐந்து தூண்கள், முகங்கள், அக்கரைப்பற்று அன்னை மகிழ்கிறாள் ஆகிய நூல்களையும், நெருப்பு வாசல் எனும் சிறுகதை நூலையும் வெளயிட்டுள்ளார்.

கொக்குகள் வாடுகின்றன, மலர்ந்தும் மலராத, கரை காணத்துடிக்கும் படகுகள், கண்திறந்து ஆகிய வானொலி நாடகங்களையும், படித்தது போதும் பெட்டியைக் கட்டு, நேர்மை தந்த புது வாழ்வு, உண்மைகள் உறங்குவதில்லை, சட்டத்தின் கரங்கள், ஒரே ஒரு குடையின்கீழ், கடன் கட்டினால் கல்யாணம், தரை மீன்கள் ஆகிய மேடை நாடகங்களையும் மோகத்தைக் கொன்றுவிடு எனும் வில்லுப்பாட்டையும் அரங்கேற்றியுள்ள இவர் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் வல்லவர்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு உட்பட பல சர்வதேச, தேசிய கவியரங்குகளிலும், பல வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, கவிதை பாடி சர்வதேசத்திலும் புகழ்பெற்றவர்.

பல பட்டங்களுக்கும் பரிசில்களுக்கும் சொந்தக்காரர். அவற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சில:
2009 இல் இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயர் விருதான கலாபூசண விருது, 2002 இல் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிரேஷ்ட கவிஞருக்கான விருது, 1999 இல் கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத்தின் ஆசுகவி பட்டம், 2008 இல் திகாமடுள்ள அபிமானி விருது, 2000 இல் கவி மாமணி விருது, 1999 இல் கவித்தாரகை விருது, 2004 இல் தினச்சுடர் பத்திரிகையின் சிறந்த கவிஞருக்கான விருது, 2009 இல் கவிச்செம்மல் பட்டம், 2012 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது.

ஊருக்காகவும், சமூகத்துக்காகவும் இவர் செய்து வரும் தொண்டுக்கு இவர் வகித்த பதவிகள் சாட்சி.
கல்முனை புதிய பறவைகள் கவிதா மண்டல செயலாளர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட தலைவர், தென்கிழக்கு கலாச்சார பேரவையின் செயலாளர், எழுவான் வெளியீட்டு பணியக தவிசாளர், பூஞ்சோலை எழுத்தாளர் மன்ற ஸ்தாபகர், பாலமுனை முற்போக்கு கலா மன்ற ஸ்தாபகர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை உபதலைவர், 1997 தேசிய மீலாத் விழா கலாசார குழுத் தலைவர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர்.

இவரது இளமைக்காலத்தில் இவரது பாலமுனை இளைஞர் மன்றத்தினால் ஆற்றப்பட்ட சேவைகள் பல. தனியாக அவர்கள் ஒரு நூலகத்தையே பாலமுனை மண்ணில் ஆரம்பித்து இயக்கிய வரலாறும் உண்டு.

இளைஞராக இருக்கையில் “ஊர்க்குருவி” என்ற புனைப்பெயரில் இவர் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளையும் பத்திரிகையினூடு வெளிச்சமிட்டவர்.

பாலமுனையின் இலக்கிய முன்னோடியான இவர் பாலமுனையின் கலை வளரவும், பல கலைஞர்களை வளர்க்கவும் தளமானவர்.

**தகவல் தொகுப்பு: எஸ் எம் றிபாஸ்தீன்.