உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக பக்கவாதம் கருதப்படுகிறது.

 உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஓர் ஒழுங்கமைவு செயல்பாட்டில் இயங்கச்செய்யும் மைய செயலகமாக மூளை செயல்பட்டு வருகிறது.

உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச்செய்யும் இதன் செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை சார்ந்தே நடைபெறுகிறது. எலும்பு மற்றும் தசையால் சூழப்பட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு ரத்த குழாய்களும், நரம்பு மண்டலமும் முக்கியமானதாகும்.

இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பும், ரத்த கசிவும் பக்கவாதம் எனும் (உடல் செயல்பாடு இழப்பு) நோயை உருவாக்குகிறது. மைய செயலகமான மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே 85 சதவீதம் பாதிப்பு உண்டாவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களின் உயிருக்கு மிகவும் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு முன் அறிகுறியும் இன்றி உருவாகும் இந்த நோயால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உடலின் செயல்பாடுகளை அசைவற்று நிறுத்தி, ஓரிடத்தில் இயக்கமில்லாமல் முடங்கச் செய்யும் பக்கவாதமானது, உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக கருதப்படுகிறது.

சர்க்கரை நோய், இதய கோளாறு, சீரற்ற ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் ஏற்படும் பக்கவாத நோயினால் உலகில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும் அதில் ஒன்றரை கோடி பேர் மரணத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன.