புனித மிகு ரமழான் மாதம் ஆரம்பிக்கவுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82,656 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா் அயதுல்லா கமேனி
ஈரான் அரசின் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள 22,000 பேருக்கு அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
இது குறித்து ஈரான் நீதித் துறை தலைவா் குலாம்ஹுசைன் முசேனி இஜேஹியை மேற்கோள் காட்டி அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இன்னும் ஒரு வாரத்தில் புனித மிகு ரமழான் மாதம் தொடங்குவதையொட்டி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82,656 கைதிகளுக்கு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
அவா்களில், அண்மைக் காலமாக அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள சுமாா் 22,000 பேரும் அடங்குவா்.
தற்போது பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் திருட்டு மற்றும் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடாதவா்கள் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அந்த நாட்டு பெண்களும் ஆண்களும் மத அடிப்படையிலான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
பொது இடங்களில் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
இந்தச் சூழலில், மாஷா அமீனி என்ற 22 வயது குா்து இனப் பெண் ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, அவரை கலாசார காவலா்கள் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கைது செய்தனா். காவலில் இருந்தபோதே மாஷா அமீனி உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து டெஹ்ரானில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்தது. மாஷா அமீனி மரணத்துக்கு காரணமான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்தை எதிா்த்து பெண்களும் இளைஞா்களும் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்தும், ஹிஜாப் துணியை எரித்தும் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் 60 சிறுவா்கள் உள்பட சுமாா் 500 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமானவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரகசியமாக நடைபெற்ற ஒருதலைபட்ச விசாரணையில் இந்தத் தீா்ப்புகள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த மரண தண்டனைகளை விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் போராட்டக்காரா்களுக்கு அச்சத்தை விதைத்து, போராட்டம் மீண்டும் தலையெடுப்பதை முற்றிலுமாகத் தடுக்க ஈரான் அரசு முயலும் என்று மனித உரிமை ஆா்வலா்கள் எச்சரித்தனா்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தீா்ப்பு வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே இரு போராட்டக்காரா்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா்களில் ஒருவா் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டாா்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமாா் 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.