ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதிய மின்சார உற்ப்த்தித் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். இது பெரும்பான்மையான உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஒரு உறுப்பினரின் ஆட்சேபனையை முழு ஆணைக்குழுவின் ஆட்சேபனை என்று விவரிப்பது தவறு.
பொது பயன்பாட்டு ஆணைக்குழு என்பது ஒரு தனிநபர் அல்ல. அதில் ஐந்து பேர் உள்ளனர். மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகிறோம். ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர்.
சில தொழிற்சங்க நிர்வாகிகள் அரசாங்கத்தின் திட்டங்களை குழப்புகின்றனர். இன்று தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எமது உற்பத்தி திட்டம் மாற வேண்டும். இந்த கட்டணம் வசூலிப்பதால், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க முடிந்தது.
இந்த மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் போது, டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும். முடிந்தால், ஜூலையில் குறைக்கப்படும். மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும். அந்த திட்டத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அப்போது ஜூலை மாதத்திற்குள் மின்கட்டணத்தை குறைக்கலாம் என கூறினார்.