உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கோர்ட்டுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்- இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் கோர்ட்டுக்கு வரும்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்ப தாவது:- இதுவரை என்மீது 74 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதனால் நான் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அப்போது எனக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் நான் கோர்ட்டில் ஆஜராகும் போது என்னை கொல்ல முயற்சி நடக்கிறது. நான் ஒரு பெரிய கட்சியின் தலைவர் பதவியில் இருப்பதால் என்னை பார்க்க கோர்ட்டில் ஏராளமான தொண்டர்கள் வருவார்கள். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நான் கோர்ட்டுக்கு வரும்போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில் இம்ரான் கானை போலீசார் நேற்று கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகிப்பவர்களுக்கு உலக தலைவர்கள் அளிக் கும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அரசு கருவூலத்தில் பாதுகாக்கப்படும். இந்த பொருட்களை இம்ரான்கான் பிரதமராக இருந்த போது மலிவு விலையில் வாங்கி கோடிக் கணக்கில் விற்று விட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதனால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய வீட்டுக்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். போலீசார் இம்ரான்கானை கைது செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நாளை (7ந்தேதி) அவர் கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.