நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய தவிசாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன எனவும், அவர்களில் ஒருவர் விரைவில் தெரிவுசெய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களையும் கட்சியில் இதுவரை வகித்த சகல பதவிகளில் இருந்து நீக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் முதற்கட்டமாக, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.