கல்முனை மாநகர சபை மக்கள் வரிப் பணத்தினை மோசடி செய்தவர்களுக்கு எதிராக தயவு தாச்சனையின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் பேசியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபை மக்கள் வரிப் பண அறவீட்டில் இரு உத்தியோகத்தர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இவ்விருவரும் பதவியிலிருந்து தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக விரிவான விசாரணையை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளருடன் தொடராக தான் ஆலோசனை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு இம்மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தான் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் வரிப்பணத்தில் இடம்பெற்ற இந்த மோசடி நடவடிக்கை கல்முனை மாநகர மக்கள் மத்தியில் கவலையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான களவு, மோசடிகளை மூடி மறைக்க தான் உள்ளிட்ட ஏனைய அரசியல் தலைவர்கள் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை எனத் தெரிவித்த அவர், இம்மோசடி மூலம் கல்முனை மக்களின் நம்பிக்கையை சிதைத்தவர்களுக்கு எதிராக தயவு தாச்சனையின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தான் பொது மக்களிடம் உறுதிப்பட தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.