ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேணைகள் இம்முறை கொண்டுவரப்பட மாட்டாது – அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களம், வௌிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை தொடர்பிலான பிரேணைகள் இம்முறை கொண்டுவரப்பட மாட்டாது எனவும் வௌி  விவகார அமைச்சர் தெரிவித்தார்.