உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யாவால் வெல்ல முடியாது, வெல்லவும் கூடாது – பிரான்ஸ் அதிபர் இமானுவல்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தோல்வி அடைய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் போர் உக்ரைனை பெருமளவில் உருகுலைத்துள்ளது.எனினும் உக்ரைன் தொடர்ந்து எதிர்த்து போரிட்டு வருகிறது. அதிபர் ஜெலென்ஸ்கி தங்களுக்கு இராணுவ உதவி வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளிடம் கோரினார்.

அதே சமயம் ரஷ்யாவுடனான சமாதான உடன்படிக்கையில் உக்ரைனின் எந்தவொரு பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யா குறித்த தனது நிலைப்பாட்டை பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வெளிப்படுத்தியுள்ளார்.

மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்பதால், உக்ரைன் ரஷ்யாவின் படையெடுப்பை பின்னுக்குத் தள்ள உதவுவதற்கு நட்பு நாடுகள் இராணுவ ஆதரவை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார்.

உக்ரேனிய மக்கள் மற்றும் அதன் இராணுவத்தின் எதிர்ப்பிற்கான எங்கள் ஆதரவையும், எங்கள் முயற்சியையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் உக்ரைன், அதன் அதிகாரிகள் மற்றும் அதன் மக்களால் தீர்மானிக்கப்படும் நம்பகமான பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கக்கூடிய ஒரு எதிர் தாக்குதலை நடத்த அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் மேக்ரான் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”சட்டவிரோத சக்தியைப் பயன்படுத்துவதை இயல்பாக்குவதை ஏற்றுக் கொள்வது என்பது, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தோல்வி அடைய வேண்டும். இந்தப் போரை ரஷ்யாவால் வெல்ல முடியாது, வெல்லவும் கூடாது.” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.