சிவப்பு நிற சோசலிஸவாதிகள் தங்களுடைய கடந்த காலங்களை மறந்து விட்டார்கள் – சஜித் பிரேமதாஸ

இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும்,அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப் போகிறது எனவும், இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் அனைத்து வர்த்தகர்களும் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கம்பளை நகரில் நேற்று (15) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருட்களின் விலையை அதிகரிப்பது, வரிச்சுமையை அதிகரிப்பது, உரங்களின் விலையை அதிகரிப்பது போன்றனவற்றைச் செய்யவே இந்த அரசாங்கத்திற்கு தெரியும் எனவும், எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வை அழித்த யானை, காகம், மொட்டு அரசை நாம் விரட்டியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், ஒரு குறிப்பிட்ட குழுவினர் தம்மால் நன்றாக செய்ய முடியும் என்று நாடு முழுவதும் இருமாப்பு பேசி வருவதாகவும்,2019 ஆம் ஆண்டு நன்றாகச் செய்வதாகக் கூறி வந்தவர் முழு நாட்டையும் அழித்ததாகவும், எனவே, அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனக்கூறித் திரியும் அந்த சிவப்பு நிற சோசலிஸவாதிகள்,71 மற்றும் 88 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்டு,மக்கள் கொல்லப்பட்டு,உத்தரவுகள் மூலம் நாட்டை ஆண்ட காலத்தை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். திருடர்களைப் பிடிப்பதாகக் கூறும் சிவப்பு சகோதரர்கள்,2005 ஆம் ஆண்டு ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்ததில் இருந்து அவர்கள் பிடிக்கப்போகும் திருடர்கள் ஒருவருமில்லை எனவும்,எனவே, 2019 ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஏமாறக் கூடாது எனவும்,அவ்வாறு செய்தால் நாடு அழிவின் விளிம்புக்குச் செல்வதை தடுக்க முடியாது போகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.