தேர்தலை நடாத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் இதில் கலந்துகொண்டார்.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது, அமைச்சர் பதிலளிக்கையில்,

“இதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் கடன் பெற்றும், பணத்தை அச்சிட்டும் அரசாங்கங்கள் தேர்தல்களை நடாத்தி வந்தன. ஆனால்; தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. ஓரளவேனும் நெருக்கடியைக் குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து நாட்டின் கடனை மறுசீரமைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதனால், பணம் அச்சிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

அத்துடன், திறைசேரி அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் அதேவேளை, இந்த நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன.

இருப்பினும், தேர்தலை நடாத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல. திறைசேரிக்கு பொறுப்பான செயலாளர் தற்போதைய நிலைமையின் தீவிரம் குறித்து திறைசேரிக்கு அறிவித்து நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும்” தெரிவித்தார்.