திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம் எனவும்,தற்போதைய அரசாங்கம் மொட்டு யானை கூட்டரசாங்கமாகும் எனவும், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை காலாவதியான பாராளுமன்றம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், இவ்வாறு மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தால், பல்வேறு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களின் வாழ்க்கையை அழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (05) நள்ளிரவு முதல், எரிவாயு விலை முந்நூறு ரூபாவால் அதிகரிக்கப் போகிறது எனவும், பெட்ரோல் விலை ஏலவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் இன்னும் இரண்டு மடங்கால் அதிகரிக்கும் எனவும், மின்சாரக் கட்டணம் மேலும் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும், சர்வதேச நாணய நிதியம் கூறியதன் காரணமாகவே இவ்வாறு செய்கிறோம் என ஜனாதிபதி காரணம் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
IMF ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரினாலும் இதுவரை அது சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இன்று சகலதையும் IMF இன் போர்வையில் மேற்கொண்டு மக்களை நசுக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருடர்களை பிடிப்பதாகவும், திருடப்பட்ட சொத்துக்களை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக Stolen Assets Recovery Act என்ற புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மினுவாங்கொடை நகரில் நேற்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.