“சொல்லாடல்களை வைத்துக்கொண்டு கருத்து மோதல் எதுவும் வேண்டாம். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கூறவில்லை.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றுதான் அன்றும் சரி இன்றும் சரி கூறி வருகின்றேன். எனவே, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும்.
வடக்கிலுள்ளவர்கள் சமஷ்டியை விரும்புகின்ற போது தெற்கிலுள்ளவர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஒற்றையாட்சி வேண்டும் என்கின்றார்கள், தெற்கிலுள்ளவர்கள் ஒற்றையாட்சியை விரும்பும்போது வடக்கிலுள்ளவர்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (04.02.2023) சுதந்திர நாள் உரையில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியிருந்தனர், இத்தகைய முரண் நிலைகளை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள் எனும் ஊடகவியளாலரின் கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அதனை நடைமுறையில் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
அதைவிடுத்து ஒரு தரப்பினர் சமஷ்டி வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வைத் தராது என்றும் அரசியல் ரீதியில், இன ரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.