ஆண் மீன் துணையின்றி குஞ்சு பொறிக்கும் அதிசய பெண் மீன்கள்!

ஆண் மீன் துணையின்றி குஞ்சு பொறிக்கும் அதிசய பெண் மீன்கள்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொறித்த வாள்மீன்களைக் (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொறிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண் மீன்களிடம் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தாலும், இயற்கை நீர் நிலைகளில் இப்படியான மீன்குஞ்சுகளை அவர்கள் கண்டிருக்கவில்லை.

ஆங்கிலத்தில் Saw fish என்றும் தமிழில் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் மீன்வகையைச் சேர்ந்த ஏழு பெண் மீன்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தபோது, அவற்றுக்கு தந்தை மீன்கள் இருந்ததற்கான எந்த மரபணு சான்றுகளையும் அவர்கள் காணவில்லை.

இந்த ஏழு பெண் மீன்களுமே கருவுறாத பெண் மீன்களின் முட்டையில் இருந்து உருவான கருவில் இருந்து பிறந்த மீன்கள் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Current Biology என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை வெகுவாக குறையும்போது இயற்கையாகவே இத்தகைய கருவுறா முட்டைகளே குஞ்சுகளைப் பொறிக்கும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்கிற சாத்தியத்தை குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.