‘கச்சதீவு அருகே சிறைபிடித்த மீனவர்கள் மீட்கப்பட வேண்டும்’ பிரதமருக்கு கடிதம்!

imagesகச்சத்தீவு அருகே மீன்பிடித்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. அவர்களை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடி காலம் தொடங்கிய ஜூன் 1-ந் தேதியன்று தமிழகத்தில் இருந்து3 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காவலில் அடைத்திருப்பதை வேதனையுடன் கூறிக்கொள்கிறேன்.

1-ந் தேதி 3 படகுகளில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரையுள்ள கணக்குப்படி, இலங்கை அரசின் பிடியில் எங்கள் மீனவர்களின் 18 படகுகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 2004-ம் ஆண்டில் இருந்து 80 படகுகள் பிடிக்கப்பட்டன. அவற்றில் 16 படகுகள் மொத்தமும் நாசமாகிவிட்டன. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரமே அந்தப் படகுகள்தான். கைதாகும் தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு, அவர்களின் படகுகளை மட்டும் வேண்டுமென்றே விடுவிக்காமல் வைத்து விடுகின்றனர்.

இப்படி அவற்றை நீண்ட காலமாக உபயோகிக்காமல் விட்டு விட்டால் அந்தப் படகுகள் நாசமடைவதோடு, ஏழை மீனவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கச்சத்தீவு அருகே பாக் நீரிணை பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு அப்பாவி மீனவர்களை ஆயுதமற்ற நிலையில் கைது செய்வது, அளவில்லா அதிர்ச்சியை தமிழக மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா இலங்கையிடையே உருவாக் கப்பட்ட அரசியலமைப்பு சாராத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விடும் என்பதை எனது அரசு ஆணித்தரமாக நம்புகிறது. கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து உறுதியான ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை, இந்தியா இடையே ஏற்பட்ட சர்வதேச கடல் எல்லை விவகாரத்தை, முடிந்து போன ஒன்றாக மத்திய அரசு கருதக் கூடாது.

கச்சத்தீவு தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசு இணைந்துள்ளது. அரசியல் சாசனத்தில் போதிய திருத்தம் இல்லாத நிலையில், கச்சத்தீவுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் அதற்கான நிர்வாக ரீதியான ஆணையையும் ரத்து செய்ய வேண்டும் என்பதும், கச்சத்தீவை இந்தியாவுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதே அந்த வழக்கின் கோரிக்கையாகும்.

புவியியல், கலாசாரம் மற்றும் வரலாற்று அடிப்படையில் இந்தியாவுக்கே கச்சத்தீவு சொந்தம் என்பதும், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் நலனுக்காக அது மீட்கப்பட வேண்டும் என்பதும்தான் எப்போதும் எங்கள் நிலைப்பாடாக உள்ளது.

மீனவர் நலனுக்காக எனது அரசு பல திட்டங்களை வகுத்தளித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான மானியம் வழங்குதல், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர், ராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடி துறைமுக மேம்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இது பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிப்பதில் உள்ள சிக்கலை குறைக்கும்.

இதற்காக ரூ.1,520 கோடி கேட்டு உங்களிடம் நான் கடந்த 3.6.14 அன்று மனு கொடுத்திருக்கிறேன். கால்நடை, பால்வளம், மீன்வளம், வேளாண்மை துறைகள் குறித்த மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வில்லை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

மீன்பிடி விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். இதில் தமிழகம் ஒரு சாதகமான நிலையை எடுத்துள்ளபோது, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இலங்கையால் தவிர்க்க முடியாததாக உள்ளது.

இதில் ஒரு உறுதியான முயற்சியை எடுத்து, மீன்பிடி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் முடிவை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் வகையில் காலக்கெடுவை நிர்ணயித்து தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இலங்கை அதிகாரிகளுடன் பேசி, 14 மீனவர் களையும் 18 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.