கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட பயணிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் போது இனி தனிமைப்படுத்த மாட்டார்கள்.
அத்துடன், இந்தியாவும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து மாற்றங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட பயண அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொடந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே உள்ளிட்ட ஏழு நாடுகள் பசுமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், ஸ்பெயின் ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் தனி பயணிகளுக்கான செலவு ஆகஸ்ட் 12ம் திகதி முதல் 1,750 பவுண்ட்ஸிலிருந்து 2,285 வரை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு அறையைப் பகிரும் கூடுதல் வயது வந்தோருக்கான கட்டணம் 650 பவுண்ட்ஸிலிருந்து 1,430 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.