மனிதன் சந்திக்கின்ற அத்தனை சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் முக்கிய காரணம் உள்ளது. அது- மனிதன் தன் கரங்களால் செய்கின்ற பாவங்களும், மனதால் ஏற்கின்ற கெட்ட எண்ணங்களும் தான்.
இதுகுறித்து, அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
“யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 4:173)
நாம் கர்வம் கொண்டு, மனதில் பெருமை கொண்டு வாழ முற்படும் போதுதான் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்பதை இந்த இறைமறை வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.
அல்லாஹ்வின் அரசவையில் கண்ணியமிக்க அறிவுஜீவியாக இருந்த ‘இப்லீஸ்’ , தான் கொண்ட கர்வத்தின் காரணமாகவே அழிவைத் தேடிக்கொண்டான். இப்ராஹீம் நபி காலத்தில் வாழ்ந்த ‘நம்ரூத்’ என்ற மன்னனும் கர்வம் கொண்டு அழிந்து போனான். மூசா நபி காலத்தில் வாழ்ந்த ‘பிர் அவ்ன்’ என்ற கொடுங்கோல் அரசன் ‘நான் தான் இறைவன்’ என அகம்பாவம் கொண்டு திரிந்தான். பின்னர், அவனும் கடலில் மூழ்கி அழிந்து போனான். காரூன் என்ற பெரும் பணக்காரன் தான் சம்பாதித்த அத்தனை செல்வங்களும் தன் திறமையால் பெற்றுக்கொண்டது என்பதை கர்வத்தோடு சொல்லி, அதனால் பூமியில் புதைந்த வரலாறும் இறைமறையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்வம் கொண்ட யாரும் எந்த காலத்திலும் நிலைத்து வாழ்ந்ததில்லை. அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறை சொல்லும் செய்தியை அறிந்தும் ஏனோ தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையே அல்லாஹ் இவ்வாறு கண்டித்து கூறுகின்றான்:
“பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமை அடித்துக் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 31:18)
‘கர்வம்’, ‘தலைக்கனம்’, ‘அகம்பாவம்’, ‘ஆணவம்’ ஆகிய தன்மையைக் கொண்ட குணாதிசயத்தை மனிதன் தன்னிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியையும் அல்லாஹ் தன் அருள் மறையிலே இவ்வாறு பதிவு செய்கின்றான்:
“அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள். அவ்வாறு உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களோடு இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)
நாம் அல்லாஹ்வை பயபக்தியுடன் வணங்கி அடிபணியும் போது, அந்த ஏக இறைவன் முன்பு பெருமை பாராட்டுவதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்கின்ற உண்மை புரியவரும். இறைவன் முன்பு தலை குனியும் போது, தலைக்கனம் அங்கிருந்து அகன்றுவிடும்.
அடுத்ததாக சொல்லுவது- உங்களது பெற்றோர்களுக்கும் அடிபணியுங்கள். பெற்றோர்கள் தான் நமது வளர்ச்சிக்காக பாடுபடும் தியாக சீலர்கள். அவர்கள் எப்பொழுதுமே நம்மை விட மேலானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.
அடுத்ததாக ஏழைகளைப் பற்றி சொல்கிறான். அவர்களிடம், பணிவு, அன்பு, பிறரை மதிக்கும் குணாதிசயங்கள் காணப்படும். அப்படிப்பட்ட ஒரு நற்பண்பு நம்மிடம் இல்லை என்றால், அவர்களை விட நாம் மிக சாதாரணமானவர்கள் என்று எண்ணத் தோன்றும்.
அடுத்து நண்பர்கள். அவர்கள் ஒரு கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மிடம் இருக்கின்ற குறை நிறைகளை எடுத்துச்சொல்லி நமக்கு வழி காட்டக் கூடியவர்கள். நமது துன்பத்திலும், துக்கத்திலும் கைகொடுத்து உதவக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்கின்ற எண்ணம் நம்மை சற்று சிந்திக்க வைக்கும்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி சொல்லும்போது, அவர்கள் நமக்காக எத்தனை விஷயங்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்தால், நம்மிடம் உள்ள கர்வம் நம்மைவிட்டு அகன்று போகும்.
உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும் நன்றி செய்யுங்கள், என்று அல்லாஹ் சொல்லும் போது, மனித வாழ்வு என்பது தனிப்பட்ட வாழ்வு அல்ல, அது ஒன்றுபட்டு வாழ்கின்ற ஒரு வாழ்வியல் தத்துவம் என்கின்றான். நம்மை சுற்றி இருக்கின்ற அத்தனை பேர்களுடன் நாம் இணைந்து வாழும்போது, அவர்களின் தேவைகளை நாமும், நமது தேவைகளை அவர்களும் பூர்த்தி செய்வதை உணரலாம்.
இதன்மூலம், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கின்றோம் என்பதும், ஒட்டுமொத்தமாக நாம் எல்லோருமே அல்லாஹ்வைச் சார்ந்து இருக்கிறோம் என்பதும் புலப்படும்.
இந்த அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கும்போது சுபிட்சம் மிளிரத்தொடங்கும். நாமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம்.