நாவிழந்த அரசியல்

ஒரு கடையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் சற்று அருகில் வந்தார். ‘தம்பி, இந்த 88 வயதில் சம்பந்தனுக்கும், 78 வயதில் மாவை சேனாதிராஜாவுக்கும் இருக்கின்ற தைரியமும், சமூகத்துக்காக பேச வேண்டும் என்ற எண்ணமும், 40-50 வயதில் இருக்கின்ற நம்முடவனுகளுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? என்று கேட்டார்.
அவர் சொன்னது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை என்று புரிந்தது. ஆனாலும், தடாலடியாக அவர் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலையும் உடனேயே சொல்ல முடியவில்லை. பிறகு, அவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் அவரே சொல்லி விட்டு விடைபெற்றார். கடைக்கு வெளியே அவர் காறி உமிழ்ந்தது காதில் விழுந்தது.

உண்மைதான்! தேர்தல் காலங்களில் மேடைகளில் பெரிய உரிமைப் போராட்ட வீரர்கள் போலவும், சமூகத்தின் காவலர்கள் போலவும் வீராப்புப் பேச்சுக்களை பேசுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்று முழங்கியவர்கள், பிரச்சினை என்று வருகின்ற வேளையில் குரலைக்கூட கொடுக்காமல் நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

இது பற்றி அவர்களை நோக்கி கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகி;ன்ற போது, ‘பாராளுமன்றத்தில் பேசினால் மட்டும் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?’ என்று ஒரு ரெடிமேட் பதிலைக் கேட்பதுண்டு. ‘நாங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம், உள்ளரங்கமாக பேச வேண்டிய இடத்தில் பேசி வருகின்றோம்’ என்று சொல்வதும் வழமையானது.

அண்மைக்கால வரலாற்றில் சாராசரியாக 20 பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகம் பெற்று வருகின்றது. ஆனால், அவ்வாறு பேச வேண்டிய இடத்தில் பேசி சமூகத்தின் எத்தனை முக்கியமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார்கள் என்று கேட்டால், அவர்களுக்கு கோபம்தான் வருமே தவிர, சரியான விடை வராது.

இப்போதிருக்கின்ற அரசியல்வாதிகள் மட்டுமன்றி, இதற்கு முன்னதாக கடந்த 25 வருட காலப்பகுதியில் முஸ்லிம்களை பிரநிதிநிதித்துவப்படுத்திய எம்.பி.க்களும் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் இதனைத்தான் செய்துவிட்டுப் போனார்கள். இதில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் அவ்வப்போது விதிவிலக்காக இருந்திருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் அதாவது வாக்காளர்கள் பெரும் தவறை தொடராக இழைத்து வருகின்றார்கள். நமது ஊரைச் சேர்ந்தவர் என்பதற்காக, வெற்றி பெற்றால் தொழில் தருவார் என்பதற்காக, கொந்தராத்து கிடைக்கும் என்பதற்காக, இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற நினைப்பில், ஊருக்கு எம்.பி. வேண்டும் என்பதற்காக, பணத்திற்கும் பொருட்களுக்காகவும்…. கொஞ்சம்கூட பொருத்தமற்றவர்களுக்கு திரும்பத்திரும்ப வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக அரசியல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் பெரும்பகுதி முஸ்லிம்களை பலிக்கடாவாக்கியே முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு ஆகப் பிந்திய உதாரணம் பலஸ்தீனம் ஆகும். அதுபோல இலங்கையில், அரசியல், இனவாத நோக்கங்களுக்கு ஒரு கருவியாக கடந்த காலத்தில் தமிழர் விவகாரம் பயன்படுத்தப்பட்டது போல, இப்போது முஸ்லிம்கள் பாவிக்கப்படுகின்றனர் எனலாம்.


இந்தப் பின்னணியில், முஸ்லிம்கள் கடந்த ஏழெட்டு வருடங்களாக எதிர்கொண்டு வந்த நெருக்கடிகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
பல்வேறு வகைப்பட்ட தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமகாலத்தில், வேறுபல கெடுபிடிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் இரண்டு அரசியல் தலைவர்களின் கைதும் உள்ளடங்குகின்றது. ஆக, யுத்தகாலத்தில் தமிழர்களின் நிலைக்கு சமமான ஒரு நிலையையும் மனஅழுத்தத்தையும் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம்.

ஆனால், இதனை தணிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இயங்குநிலை அரசியல்வாதிகளும் வாழாவிருப்பதையே பெரும்பாலும் காண முடிகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வாக்களிக்கச் செய்த எம்.பி.க்களும் திரைமறைவில் ஆளும் தரப்புடன் சங்கமமாகி விட்டனர்.

ஆளும் தரப்பிற்கு வாக்களிக்கச் சொன்ன முஸ்லிம் எம்.பி.க்களும் அடக்கி வாசிக்கின்றனர். ஆக மொத்தத்தில் சமூகத்தின் காவலர்கள் எல்லோரும் தமக்கு வசதியான கூடாரங்களுக்குள் ஒளிந்து கொண்டுள்ளனர். முஸ்லிம் சமூகம் கேட்பார் பார்ப்பார் அற்று நிற்பதாகச் சொல்லலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு சமூகம் கொடுக்கின்ற மிகப் பெரிய கௌரவமாகும். ஓட்டுமொத்த சமூகத்திற்காகவும் நியாயமான அடிப்படையில் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் வாக்களிக்கின்றனர். அத்துடன், எம்.பிக்களுக்கு ஏகப்பட்ட கொடுப்பனவுகளும் வசதிவாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன.
இவையெல்லாம், அவர்களது கல்விசார் தகுதிக்குக்கு வழங்கப்படுகின்றவையல்ல. அப்படி வழங்குவது என்றால் இலங்கை பாராளுமன்றத்தில் அரைவாசிப் பேருக்கே அது கிடைத்திருக்கும்.

மாறாக, இது மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்திற்காக வழங்கப்படுகின்ற வரப்பிரசாதங்களாகும் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் நன்றாக சுகிக்கின்ற, அனுபவிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சபையில் உரையாற்றுவதற்கான விசேட உரிமையை மாத்திரம் சரிவரப் பயன்படுத்துவதில்லை. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது.
இப்போதிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் அநேகமானோர் முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவதை அநேகமாக காணக்கிடைக்கவில்லை. பலர் சபையில் கடைசியாக உரையாற்றியது எப்போது என்பதே மறந்து போய்விட்டது. சிலர் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்களா என்பது கூட தெரியவில்லை.

ஒரு ஊடகவியலாளர் என்றால் சமூகத்தின் பிரச்சினைகளை எழுத வேண்டும். ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மருத்துவர் என்றால் நோயைக் குணப்படுத்த முயற்சி;க்க வேண்டும். ‘ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றோ, என்ன பயன் கிடைக்கும்’ என்றோ கேட்கக் கூடாது.

ஆனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போது, முஸ்லிம் அரசியல்வாதிளும், அவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அல்லக்கைகள் மற்றும் பேஸ்புக் போராளிகளும் அக் கேள்வியைக் கேட்பதுண்டு. ‘இந்த அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் கதைத்து என்னதான் நடக்கப் போகின்றது? எனவே நாங்கள் பேசவேண்டிய இடத்தில் பேசுகின்றோம்’ என்பார்கள்.

தர்க்கவியல் ரீதியாக இது நியாயமான கேள்விதான்! ஆனால், பாராளுமன்றத்தில் கதைப்பதில்லை என்றால் சபைக்கு செல்லால் விடலாமே. நேரலையாக வீட்டில் இருந்தே பார்க்கலாம். நீங்கள் சொல்வது போல பேச வேண்டிய இடத்தில் பேசலாம். மூன்று மாதத்திற்குள் ஒரு தடவை ‘அட்டண்டன்ஸை’ போட்டால் போதும்தானே என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?

முஸ்லிம்களின் பிரச்சினையை, அபிலாஷைகளை எடுத்துரைக்க வேண்டும். நியாயங்களை சிங்கள மக்களும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முறையாக எடுத்துரைக்க வேண்டும். இதனால், இவ்விடங்கள் பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவு செய்யப்படுவது மட்டுமன்றி, நாட்டு மக்களையும் சென்றடையும். ஒரு புரிதல், தெளிவு பிறக்கும். அத்துடன், மிக முக்கியமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாட்டுக்கும் உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

தமிழ் அரசியல்வாதிகள் சமூக சேவை அமைப்போ அல்லது அறநெறிப் பாடசாலையோ நடாத்தவில்லை. உங்களைப் போல அவர்களும் அரசியலையே செய்கின்றனர். ஆனால் மேற்சொன்ன பணியை அவர்கள் கணிசமாக செய்திருக்கின்றார்கள்.
பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் தமது சமூகத்திற்காக பேசுகின்றார்கள். இரா.சம்பந்தன், சுமந்திரன், சிறிதரன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் தொடக்கம் சாணக்கியன் வரை இப்பட்டியல் நீளுகின்றது. முன்னாள் எம்.பி.க்களும் தொடர்ந்து எதனையாவது பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் எம்.பி.க்களில் றவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் என பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவரே அத்திபூத்தாற்போல் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர். சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ள நிலையிலும் றிசாட் பதியுதீன், தனக்கு நியாயம் வேண்டி சபையில் பேசினார். ஹரீஸ் போன்றோர் ஒரு பிரதேசத்தின் பிரச்சினையை மயமாக வைத்தே பெரும்பாலும் பேசுகின்றார்.

ஆரம்பத்தில் ஆக்ரோசமாக உரைநிகழ்த்திய முசாரப் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரும் இப்போது அடக்கி வாசிக்கின்றார். தே.கா. தலைவர் அதாவுல்லா சபையில் பேசுவது குறைந்து விட்டது. இசாக் ரஹ்மான், றஹீம், நஸீர் அகமட், பைசல் காசிம், தௌபீக் உள்ளடங்கலாக ஏனைய பெரும்பான்மைக் கட்சிசார் முஸ்லிம் எம்.பி.க்கள் சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் கடைசியாக குரல் எழுப்பியது எப்போது என்பது அவர்களுக்கே மறந்து போயிருக்கும்.

ஒருசிலர் நக்குண்டு நாவிழந்துள்ளனர். சிலர் பைல்கள் மற்றும் போலிக் குற்றச்சாட்டுக்கள், கைதுகள் குறித்த அச்சத்தில் நாவிழந்துள்ளதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

எது எவ்வாறாயினும், முஸ்லிம்கள் சிவில் சமூக ரீதியாகவும், இன மத அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ள இக் காலப்பகுதியில், முஸ்லிம் எம்.பி.க்கள் நாவிழந்து நிற்பது மிக மோசமான ஒரு நிலைமையாகும். வாக்களிக்கும் மக்கள் மாறாத வரை இந்நிலைமை மாறப் போவதும் இல்லை.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 22.05..2021)