சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைந்துள்ளது.
சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கா, தைவானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தைவானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.
இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 5-ந் தேதி சீனாவின் 10 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டது.
இந்த நிலையில் சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, எங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ கூறியதாவது:-
நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.
தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.
அவர்கள் (சீனா) ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தைவான் மக்களை கவர்ந்திழுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது ராணுவ விமானங்களையும், ராணுவ கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.
சீனர்கள், தைவான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள். அதை நான் தோற்கடிப்பதாகவே வகைப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.