இந்தியாவின் 234 தொகுதிகளை உள்ளடக்கிய “தமிழ் நாடு” மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று 06.04.2021 நடைபெற்றுள்ளது. இதன் பெறுபேறுகள் 02.05.2021இல் வெளியிடப்பட உள்ளது.
நீண்ட காலங்களுக்கு பின்பு தமிழக அரசியலில் பெரும் நட்சத்திரங்களாக விளங்கிய கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இல்லாத நிலையில் முதன்முறையாக இந்த தேர்தல் நடைபெறுகின்றது.
முதல்வர் காமராஜரின் மறைவுக்கு பின்பு தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஓரம்கட்டப்பட்டு திராவிட கட்சிகளையே தமிழக மக்கள் ஆதரிக்க தொடங்கினர். இதற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்கள் முன்னெடுத்த கொள்கைகளே காரணமாகும்.
இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சிகளான ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுடன் தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரு பெரும் மாநில கட்சிகளின் தலைமையில் கூட்டணியமைத்து போட்டியிடுகின்றன.
இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் அ..தி.மு.க தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது.
மறுபக்கத்தில் மு.க. ஸ்டாலினின் தி.மு.க, தலைமையில் காங்கிரஸ் கட்சி, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வை. கோபாலசாமியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொமியுனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகளான காதர் முஹையதீனின் இந்திய முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லாஹ்வின் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் இன்னும் சில கட்சிகளும் பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், சசிகலா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இவ்விருவரும் தேர்தலில் போட்டியிடாதது பலத்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் ஜாம்பவான்களான ரஜனிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இவர்கள் ஆட்சியை கைப்பேற்றுவதனை யாராலும் தடுக்க முடியாமல் இருந்திருக்கும்.
இதனாலேயே தேர்தல் கூட்டணி ஒன்றுக்காக கமலஹாசன் அவர்கள் ரஜனிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஏற்கனவே ரஜனி அறிவித்துவிட்டார்.
ரஜனிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தாலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர் என்பது பரவலாக பேசப்பட்ட விடயமாகும். ரஜனிகாந்தின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த முக்கிய ஆதரவாளர்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டதன் மூலம் அது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த தேர்தலில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் தலைமையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இன்னும் சில சிறிய கட்சிகளும் சேர்ந்து இரு தேசிய கட்சிகளுடன் இணையாது தனித்து போட்டியிடுகின்றது.
அதுபோல் தினகரனின் அம்மா முன்னேற்ற கழகத்தின் தலைமையில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் தே.மு.தி.க மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து தனித்து போட்டியிடுகின்றது.
ஒன்றுக்கொன்று முரணான கொள்கையுடைய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்ற நிலையில் சீமான் தலைமையிலான “நாம் தமிழர் கட்சி” எவருடனும் கூட்டு சேராமல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளது.
ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்ற சீமான் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளையும் விட அதிகமான வாக்குகளை இந்த தேர்தலில் பெற்றுக்கொள்வாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இளைஞர்களின் அதிகமான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. ஆனாலும் சீமானால் ஆட்சியை கைப்பேற்ற முடியாது.
சீமானின் அரசியல் வளர்ச்சியானது தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிகளையே அதிகம் பாதிப்படைய செய்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கே வழங்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அ.தி.மு.க வானது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
பிரதமர் மோடியினால் முஸ்லிம்களுக்கெதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டம் காரணமாக அதனுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க வுக்கு எதிராகவே பெரும்பாலான முஸ்லிம்கள் உள்ளார்கள்.
அத்துடன் முஸ்லிம்களின் ஆதரவினை பெற்ற முஸ்லிம் கட்சிகள் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான முஸ்லிம்களின் வாக்குகள் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கே உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தமிழகத்தில் பலயீனமான ஆட்சி நிலவி வருவதன் காரணமாக பெரும்பாலான தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தினை விரும்புகின்றனர். இதனால் பலமான கூட்டணியாக உள்ள தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கே அதிக சாத்தியம் காணப்படுகின்றது.
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பணம், சாராயம், உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளைவிட தமிழக அரசியல்வாதிகள் குறைந்தவர்கள் அல்ல.
எனவே அ.தி.மு.க கூட்டணிக்கு இருக்கின்ற மாநில, மத்திய ஆட்சி அதிகாரம் மற்றும் தாமதமாக பெறுபேறுகள் வெளியிடுவதனால் இடம்பெறுகின்ற முறைகேடுகள் நடைபெற்றால் அன்றி மு.கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு வேறு எந்த தடைகளும் இருக்கப்போவதில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது