அமீரகத்தின் காற்று மாசுபாடு தொடர்பாக அளவீடு செய்யும் வகையில் ‘டிஎம்சாட் 1’ என்ற புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் துபாய் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் அடிப்படையில் அமீரகத்தில் இருக்கும் காற்று மாசுபாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் புழுதிக் காற்று பொதுவாக இருக்கும். இதன் காரணமாக பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த காற்று மாசுபாட்டை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும், தேவையான முன்னெசரிக்கை மேற்கொள்ளவும் இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள கருவிகள் பல்வேறு வடிவங்களில் படங்களை எடுக்கும் வசதி கொண்டது ஆகும். இது ஏவப்பட்ட சில நாட்களில் முதல் படம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது பூமியில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டப்பாதையில் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.