இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் டங்கன் பிளட்சர். இவரது ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால், இப்பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், இம்மாதம் வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டி பதுல்லாவில் 10ம் தேதி துவங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு, இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம், அணியின் இயக்குனர் பதவியிலும் இவர் தொடர்வார். பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தொடர் முடிந்தபின், சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய ஆலோசனை குழு புதிய பயிற்சியாளர் குறித்து முடிவு எடுக்கும்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு செயலர் அனுராப் தாகூர் கூறுகையில்,‘‘ இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்ய்பட்டுள்ளார். இந்த முடிவு, வங்கதேச தொடருக்காக எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
சமீபத்திய உலக கோப்பை தொடரில், ரவி சாஸ்திரி அணி இயக்குனராக இருந்தார். இத்தொடரில் அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியது. இதனால், இவருக்கு பயிற்சியாளர் பதவி தரப்பட்டுள்ளது.
கடந்த 2007ல் கிரேக் சாப்பல் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அப்போதும், வங்கதேச தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.