ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் பரிசீலனை செய்யப்படும். அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. பெரும்பான்மையை பாதுகாத்துக் கொள்ள உண்மையை மூடி மறைக்க முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. குண்டுத்தாக்குதல் சம்பவமும், அதனை ஆராய்வதற்கான ஆணைக்குழு நியமனமும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது.
குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடவடிக்கைகளை சுயாதீனமான முறையில் முன்னெடுத்தது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம் பெறவில்லை. ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி வினவிய போது அதற்கு கத்தோலிக்க சபையினர் மறுப்பு தெரிவித்தார்கள்.
குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளோம். இதனை அரசாங்கத்தின் பலவீனம் என கருத முடியாது. குறைப்பாடுகள் பரிசீலனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அரசியல் தேவைக்காக பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக ஒருபோதும் செயற்படமாட்டோம் என்றார்.