முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1615282333193"}

இந்தியாவிலிருந்து அடுத்த கட்ட கொவிட் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிறிய கால தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாரியதொரு கால தாமதம் இன்றி ஒரு சில வாரங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். எனவே முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலகில் இதுவரையில் ஒரு தடுப்பூசி கூட கிடைக்கப் பெறாத சுமார் 110 நாடுகள் காணப்படுகின்றன. இலங்கைக்கு இதுவரையில் 1.26 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எதிர்வரும் தினங்களில் மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அவற்றில் இந்திய நிறுவனத்திடமிருந்து அடுத்த கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில், அந்நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தாமதமடையக் கூடும். எனினும் கூடிய விரைவில் அவற்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பெற்றுக் கொள்வதற்கு மேலும் சில வாரங்கள் உள்ளன. எனவே அதற்கிடையில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு தடுப்பூசி கட்டாயம் வழங்கப்பட வேண்டிய சகல இலங்கை பிரஜைகளுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி வழங்கப்படும். பிரபலமானோருக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றதே தவிர இதில் எவ்வித உயர்வு தாழ்வும் கிடையாது.

அரசாங்கத்திற்கு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவே முடியாது என்று எதிர்க்கட்சி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. எனினும் நாம் அவற்றை பொய்யாக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். தடுப்பூசிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட போதிலும் , உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியை மக்களுக்கு வழங்கிய அவை பாதுகாப்பனவை என்பதை நிரூபித்துள்ளோம்.

மேலும், ரஷ்ய அரசாங்கத்தினால் ஸ்புட்னிக் எனப்படும் கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இலங்கை ஒளடத மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் அனுமதியளிக்க வேண்டும் என்றார்.